ஐக்கிய அரபு சிற்றரசுகளில் இருந்து இந்தியாவின் மும்பை நகருக்கு வரும் அனைத்துலகப் பயணிகளுக்கு ஏழு நாள் இல்லத் தனிமை உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மும்பை மாநகராட்சிக் கழகம் அறிவித்துள்ளது.
முன்னதாக, அத்தகைய பயணிகள் மும்பை வந்திறங்கியதும் விமான நிலையத்தில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொள்வதும் ஏழு நாள் இல்லத் தனிமை உத்தரவை நிறைவேற்றுவதும் கட்டாயமாக்கப்பட்டு வந்தது. ஆனால், அத்தகைய பயணிகளுக்கு இந்த விதி இனி பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றி அமைக்கப்பட்டுள்ள இந்தப் பயண வழிகாட்டி நெறிமுறைகள் திங்கட்கிழமை (ஜனவரி 17) நள்ளிரவில் இருந்து நடப்புக்கு வருகிறது.