செய்தியாளர் ராஜீவ் சர்மாவுக்கு அமலாக்கத்துறை நெருக்கடி
புதுடெல்லி: தன்னிச்சையான செய்தியாளரான ராஜீவ் சர்மாவின் சொத்துகளை மத்திய அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய ஆவணங்களை அவர் சீனாவுக்கு விற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சீன உளவு அமைப்பிடம் அவர் அந்த ஆவணங்களை ஒப்படைத்ததாகவும் அவரது கூட்டாளிகள் தேடப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2020ஆம் ஆண்டில் டெல்லி காவல்துறை ராஜீவ் சர்மாவைக் கைது செய்தது. பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ஆவணங்களை விற்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. எனினும் இந்த வழக்கில் அவர் பிணை பெற்றார்.
பின்னர் வெளியே வந்த அவர் மீது 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை புகார் கூறியது. அதன் பேரில் அவர் மீண்டும் கைதானார். எனினும் கடந்த வாரம் இந்த வழக்கிலும் டெல்லி உயர் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது.
இந்நிலையில், அவருக்குச் சொந்தமான ரூ.48 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. அவை டெல்லி பீதம்புரா குடியிருப்புப் பகுதியில் உள்ளன. தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து சீனா, நேப்பாள நாடுகளைச் சேர்ந்தவர்களின் பெயரில் ராஜீவ் சர்மா போலி நிறுவனங்களைத் தொடங்கியதாகவும் அவற்றின் மூலம் சீன உளவு அமைப்பிடம் பணம் பெற்றதாகவும் அமலாக்கத்துறை சாடியுள்ளது.
இதே நிறுவனங்கள் மூலம்தான் அவர் சீன உளவு அமைப்புக்குத் தேவையான இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புடைய ஆவணங்களை அவர் விற்றதாகக் கூறப்படுகிறது.
ராஜீவ் சர்மா ஊடகத் துறையில் சுமார் நாற்பது ஆண்டுகால அனுபவம் கொண்டவர். கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் தன்னிச்சையான செய்தியாளராக மாறினார். பின்னர் சீன அரசுக்குச் சொந்தமான 'குளோபல் டைம்ஸ்' பத்திரிகையில் எழுதி வந்த அவர், 2016ஆம் ஆண்டு அந்நாட்டு உளவு அமைப்புடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதாகத் தெரிகிறது.
பின்னர், ஒப்பந்த அடிப்படையில் அவர் இந்தியாவின் பாதுகாப்பு ரகசியங்களை சீனாவுக்கு விற்று வந்துள்ளார் என்பது அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டாகும்.

