ஆம் ஆத்மி: இளையர்களுக்கு மாதந்தோறும் 3,000 ரூபாய்

ஆம் ஆத்மி: இளையர்களுக்கு மாதந்தோறும் 3,000 ரூபாய்

1 mins read
74a84f8e-2fe5-4743-8903-adf1592dd7ed
-

பானாஜி: கோவாவில் வேலையில்லா இளையர்களுக்கு மாதந்தோறும் மூவாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

மேலும், அம்மாநில மக்களின் மேம்பாட்டுக்காக 13 அம்ச திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பிப்ரவரி 14ஆம் தேதி கோவாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு வாக்குறுதிகளை அளித்து வருகின்றன.

இந்நிலையில், கோவா மக்களுக்கு ஆம் ஆத்மி கட்சி எதிர்காலம் குறித்த புதிய நம்பிக்கையை வழங்கி உள்ளதாக முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

"வேலை இல்லாத இளையர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப் படும். சுரங்கத்தொழில் மூலம் கோவாவிற்கு நிலையான எதிர்காலம் உள்ளது. ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில் புது அறிவிப்புகளை செயல்படுத்துவோம்.

"நடப்பு அரசாங்கத்தின் மீது மக்கள் விரக்தியில் உள்ளனர். எனவே புதிய மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்," என்றார் கெஜ்ரிவால்.