உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் போட்டி
லக்னோ: உத்தரப் பிரதேச தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. முதற்கட்டமாக 107 வேட்பாளர்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். முதல் வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் அயோத்தி தொகுதியில் அவர் களமிறங்குவார் எனக் கூறப்பட்டது. பிப்ரவரி 10ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
ஜிதேந்திர சிங்: 2047ல் உலகின் பொருளாதார வல்லரசாகும் இந்தியா
புதுடெல்லி: எதிர்வரும் 2047ஆம் ஆண்டு இந்தியா தனது நூறாவது சுதந்திர ஆண்டு கொண்டாட்டத்தின்போது, உலகின் பொருளாதார வல்லரசாகத் திகழும் என மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை துணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மின்னிலக்கக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். "சிறந்த நிர்வாகத்துக்கான தொலைநோக்கு செயல்திட்டத்தை நாம் உருவாக்கும் அதேநேரம், மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்கேற்ப மின்னிலக்க நிறுவனங்களை ஏற்படுத்த வேண்டும்," என்றார் அமைச்சர் ஜிதேந்திர சிங்.
மீண்டும் பாதயாத்திரை: கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை
பெங்களூரு: மேகதாது அணையைக் கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு உடனடியாக நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வலியுறுத்தி உள்ளார். இல்லையெனில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் பாதயாத்திரை தொடங்கப்படும் என அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார். "நாங்கள் பாத யாத்திரை போராட்டத்தை தற்காலிகமாகத்தான் நிறுத்தி உள்ளோம். மீண்டும் அதை தொடங்கும்போது முன்னைவிட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்," என்றார் சிவக்குமார்.
கங்கை: ஒரு மில்லியன் பேர் நீராடல்
லக்னோ: மகர சங்கராந்தியை ஒட்டி, இரு தினங்களுக்குள் கங்கை நதியில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடினர். வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வரும் போதும், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏராளமான பக்தர்கள் கங்கையில் புனித நீராடல் மேற்கொண்டனர். கொரோனா நெருக்கடியையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் குவிந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

