மும்பை: புனே நகரை அடுத்துள்ள சிரூர் பகுதியைச் சேர்ந்த ஆஷா வக்மரே என்ற பெண்மணி தனது பகுதியைச் சேர்ந்த சிலருடன் சிறிய ரகப் பேருந்தில் சுற்றுலா சென்றிருந்தார். 7ஆம் தேதி புறப்பட்ட அந்தக் குழு நேற்று முன்தினம் ஊர் திரும்பியது.
இந்நிலையில், பேருந்து ஓட்டுநருக்கு எதிர்பாராதவிதமாக வலிப்பு ஏற்பட்டது. அந்த ஆடவர் தனது இருக்கையிலேயே சாய்ந்துவிட்டார்.
இதைக்கண்டு பேருந்தில் இருந்த பெண்கள் பயத்தில் குரல் எழுப்ப, ஆபத்தை உணர்ந்த ஆஷா, சட்டென இருக்கையில் சாய்ந்துவிட்ட ஓட்டுநரை அப்புறப்படுத்தினார். பின்னர் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து அவரே பேருந்தை இயக்கினார்.
இத்தனைக்கும் ஆஷாவுக்கு கார் மட்டுமே ஓட்டத் தெரியும். எனினும் துணிச்சலுடன் செயல்பட்டு, பேருந்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தூரம் அதை ஓட்டிச் சென்றார் ஆஷா.
பின்னர் அந்த ஓட்டுநருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பேருந்தில் இருந்த மற்ற பெண்களையும் குழந்தைகளையும் காப்பாற்றிய ஆஷாவுக்குப் பாராட்டுகள் குவிகின்றன. அவர் பேருந்தை இயக்கியபோது மற்றொரு பெண் அதை காணொளியாகப் பதிவு செய்து, இணையத்தில் வெளியிட, அது பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

