திருவனந்தபுரம்: நாடு முழுவதும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி வரும் நிலையில், கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அன்றாடம் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதையடுத்து தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கேரளாவில் ஒரே நாளில் புதிதாக 17,755 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நேற்று முன்தினம் மேலும் 17 பேர் தொற்றுப் பாதிப்புக்கு பலியாகிவிட்டனர்.
அன்றாட தொற்று எண்ணிக்கை அதிகரி்த்த வேளையில், சனிக்கிழமையன்று மூவாயிரம் பேர் மட்டுமே குணமடைந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தற்போது சுமார் 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொற்றுப் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மகாராஷ்டிர நிலவரம்
இதற்கிடையே, மகாராஷ்டிராவிலும் டெல்லியிலும் தொற்றுப் பாதிப்பு உச்சத்தை அடைந்திருக்கக் கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
மகாராஷ்டிராவில் நேற்று முன்தினம் புதிதாக 42,462 பேருக்கு புதிதாக கிருமி தொற்றியுள்ளது. அவர்களில் 125 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதியானது.
சனிக்கிழமை நிலவரப்படி அம்மாநிலத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 264,441ஆக கூடியுள்ளது. ஒரே நாளில் மேலும் 23 பேர் உயிரிழந்துவிட்டனர்.
மாநிலத்தில் ஓமிக்ரான் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1,730ஆக உள்ளது.
கர்நாடகா நிலவரம்
இதற்கிடையே கர்நாடகாவில் அன்றாட தொற்றுப் பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதையடுத்து தீவிர அறிகுறிகள் உள்ளவர்கள் மட்டுமே சிகிச்சைக்காக மருத்துவமனைகளை அணுக வேண்டும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அடுத்த இரு வாரங்களுக்கு இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று அம்மாநில சுகாதார, குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் அனில்குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் நேற்று முன்தினம் மட்டும் 32,793 பேருக்கு புதிதாக கிருமி தொற்றியுள்ளது. பெங்களூரில் மட்டும் 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமையன்று மேலும் ஏழு பேர் பலியாகிவிட்டனர். மொத்த மரண எண்ணிக்கை 38,418ஆக அதிகரித்துள்ளது.

