வெளிமாநிலத் தொழிலாளர் ஒருவரிடம் இருந்து அவருடைய உடைமைகளைப் பறித்து தப்பிச் சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்த சம்பவம் இந்தியாவின் கர்நாடக மாநிலம், மங்களூரில் நிகழ்ந்தது.
நேரு மைதானம் பகுதியில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் ஜனவரி 13ஆம் தேதி மதியம் வீதியோரம் அமர்ந்து இருந்தார்.
அப்போது சந்தேக நபர்கள் மூவர் அவரை மிரட்டி, அவரிடம் இருந்த கைபேசி மற்றும் பணப்பைப் பறித்துக்கொண்டு ஓட்டமிட்டனர்.
அப்போது அந்த வழியாக காரில் வந்த காவல்துறை அதிகாரி ஒருவர், அதனைப் பார்த்ததும் கொள்ளையர்களைத் துரத்திச் சென்று அவர்களின் ஒருவனை மடக்கிப் பிடித்தார். அப்போது அந்தச் சந்தேக நபர் தப்ப முயன்றபோது அவனை இறுக்கமாக பிடித்து, அவனிடம் விசாரணை மேற்கொண்டார் அந்தக் காவல்துறை அதிகாரி.
பிடிபட்ட நபர் மூலம் மற்றொரு சந்தேக நபரை தொலைபேசியில் அழைத்து அங்கு வரவழைத்து அவனையும் அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.
தப்பியோவிட்ட மூன்றாவது சந்தேக நபரை அதிகாரிகள் பின்னர் கைது செய்தனர்.

