தடுப்பூசி போட்டுக் கொள்வது தனிப்பட்டவரின் விருப்பம் என்கிறது இந்திய அரசு
புதுடெல்லி: தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று நீதிமன்ற வழக்கு ஒன்றில் இந்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
"மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று தடுப்பூசி போட வேண்டும், தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை பொது இடங்களில் காண்பிக்கும் நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்," என்று தொண்டு நிறுவனம் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் தடுப்பூசி போட்டுக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இது, அமைச்சு மற்றும் மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெருந்தொற்றை கருத்தில் கொண்டே பொதுமக்கள் நலன் கருதி தடுப்பூசி போடும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
மக்கள் தடுப்பூசி போட வேண்டும் என பத்திரிகை, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்ட பல்வேறு வழி முறைகள் வழி நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது.
ஆனால், தனிப்பட்ட நபரின் விருப்பத்திற்கு மாறாக யாரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்த முடியாது.
எந்தவித நடவடிக்கைக்கும் தடுப்பூசி சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்று எந்த விதிமுறைகளையும் மத்திய அரசு விதிக்கவில்லை என்று அந்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தினசரி தொற்று சற்றுத் தணிந்துள்ளது. ஞாயிற்றுக் கிழமை 2.71 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று காலை முந்தைய 24 மணி நேரத்தில் 2.58 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,73,80,253 ஆனது. நேற்று காலை முந்தைய 24 மணி நேரத்தில், 1,51,740 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தொற்று காரணமாக மேலும் 385 பேர் மரணமடைந்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,86,451க்கு அதிகரித்துள்ளது.
இதற்கிடையே 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு விரைவில் இரண்டாவது தடுப்பூசி போடப்படும் என்றும் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் தொடக்கத்தில் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என்றும் மத்திய சுகாதார அமைச்சு கூறியுள்ளது. இந்தியா, ஞாயிறு வரை கடந்த ஓராண்டில் 157 கோடிக்கும் மேல் தடுப்பூசி போட்டு சாதனை படைத்துள்ளது.

