புதுடெல்லி: புகழ்பெற்ற 'கதக்' நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகாராஜ் காலமானார். அவருக்கு வயது 83.
ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள தனது பேரப்பிள்ளைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற் பட்டதாகக் கூறப்படுகிறது.
வீட்டில் உள்ளோர் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கே அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், பண்டிட் பிர்ஜு மகாராஜ் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அண்மையில் சிறுநீரகக் கோளாறு காரணமாக பிர்ஜு மகாராஜ், ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெற்றுவந்தார்.
'கதக்' நடனக் கலைஞர்களின் மகாராஜ் குடும்பத்தைச் சேர்ந்த பிர்ஜு மகாராஜின் தந்தை அச்சன் மகாராஜ், மாமன்மார்கள் சாம்பு மகாராஜ், லச்சு மகாராஜ் ஆகியோரும் தலைசிறந்த கதக் நடனக் கலைஞர்கள் ஆவர். பிர்ஜு மகாராஜ் தனது திறமைக்காக நாட்டின் இரண்டாவது உயரிய விருதான 'பத்ம விபூஷண்' விருதைப் பெற்றவர்.
பண்டிட் ஜி, மகாராஜ் ஜி என்று அன்போடு அழைக்கப்படும் பண்டிட் மகாராஜ், சிறந்த டிரம்ஸ் இசைக் கலைஞரும் கூட, தவிர அவர் தபளா வாத்தியக் கருவியையும் வாசிக்கக் கூடியவர். தும்ரி, தாத்ரா, பஜன், கஸல் போன்ற வடிவிலான பாடல்களை மிகச் சிறந்த முறையில் நேர்த்தியாகப் பாடக் கூடியவர்.
"இரவு உணவு சாப்பிட்டு படுத்துக்கிடந்தார். அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவருக்கு இதய நோய் இருந்ததால் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று நினைத்தோம்.
"மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றோம். ஆனால் காலம் கடந்துவிட்டது," என்று பிர்ஜு மகாராஜின் கொள்ளுப் பேத்தியும் கதக் நடனக் கலைஞரு மான ராகினி கூறியதாக பிடிஜ தெரிவித்தது.
கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் 'உனைக் காணாத நானும்..' என்ற பாடலுக்கு நடன வடிவமைப்பு அமைத்தவர் பண்டிட் பிர்ஜு மகாராஜ்தான். மேலும், நடிகர் கமல்ஹாசன் அவரிடம்தான் கதக் நடனம் கற்றுக்கொண்டார்.

