முதல் மூன்று இடங்களில் கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்கள்
புதுடெல்லி: இந்தியாவில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்றைய நிலவரப்படி புதிதாக 2,82,970 பேரை கொரோனா தொற்றியுள்ளது. இது அந்நாட்டு சுகாதாரத்துறையின் தரவுகள் வழி தெரியவந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 2,71,202 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை, திங்கள்கிழமை 2,58,089 ஆகக் குறைந்தது. செவ்வாய்க்கிழமையும் இறங்குமுகமாக 2,38,018க்குச் சென்றது. ஆனால், நேற்று அன்றாடத் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 441 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதிய வகை ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,961 ஆக பதிவாகியுள்ளது. இவ்வகைக் கிருமியால் பாதிக்கப்படுவோர் விகிதம் 0.79 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது 18,31,000 பேர் கொவிட்-19 பாதிப்புக்குச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,88,157 பேர் தொற்றுப் பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா பாதிப்பிற்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 230 நாள்களுக்குப் பிறகு மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
தொற்று நோய் பரவுவதை திறம்பட கண்காணித்து பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்களே ஆக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களாகக் கூறப்படுகின்றன.
இந்தியாவில் அதிகமானோர் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த நிலையிலும் உள்ளன.
நேற்றைய நிலவரப்படி கர்நாடகாவில் 41,457 பேருக்கும், மகாராஷ்டிராவில் 39,207 பேருக்கும் கேரளாவில் 28,481 பேருக்கும் தமிழ்நாட்டில் 23,888 பேருக்கும் கிருமி தொற்றியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆந்திராவில் அன்றாடத் தொற்று 6,996 ஆக உள்ளது.
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட மாநிலங்கள் கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளதோடு, தடுப்பூசி, பரிசோதனைப் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,88,157 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3.55 கோடியாக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

