மகாராஷ்டிராவில் காவல்துறையைச் சேர்ந்த 499 பேருக்கு தொற்று
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 499 காவல்துறையினருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர்களுடன் சேர்த்து மொத்தம் 4,090 காவல்துறையினரை கொரோனா தொற்றியுள்ளது. இவர்கள் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்மாநிலத்தில் இதுவரை காவல்துறையில் 40,959 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 46 அதிகாரிகளும் 459 காவலர்களும் உயிரிழந்துவிட்டனர்.
பஞ்சாப் முதல்வரின் உறவினர்
வீட்டில் அதிரடிச் சோதனை
சண்டிகர்: பஞ்சாப் முதல் அமைச்சர் சரண்ஜித் சிங் சன்னியின் உறவினர் வீட்டில் அமலாக்கத்துறையினர் கடந்த செவ்வாய்க்கிழமை அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். முதல் அமைச்சரின் உறவினரான புபீந்தர் சிங் ஹனி மற்றும் அவரது கூட்டாளி சந்தீப் குமார் ஆகியோரின் வீட்டில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. சட்டவிரோத மணல் கடத்தல் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றது. பல மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் 6 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புபீந்தர் சிங் ஹனி வீட்டில் இருந்து 4 கோடி ரூபாயும் அவரது கூட்டாளி சந்தீப் குமாரின் வீட்டில் இருந்து 2 கோடி ரூபாயும் கைப்பற்றப்பட்டது. பஞ்சாப்பில் பிப்ரவரி 20ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கை பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
ஆம் ஆத்மி: கோவா முதல்வர்
வேட்பாளராக வழக்கறிஞர் அமித் பலேகர்
பனாஜி: கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக வழக்கறிஞர் அமித் பலேகரை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளன. இதில், கோவா சட்டப்பேரவைக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறுகிறது. கோவா சட்டப்பேரவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடவுள்ளது.
மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை
ஹைதராபாத்: தெலுங்கானா எல்லைக்குட்பட்ட காட்டுப் பகுதியில் நேற்று அதிகாலையில் காவல்துறையினருக்கும் மாவோயிஸ்ட்டுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பெண் உள்பட நான்கு மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
கடற்படை கப்பலில் வெடிவிபத்து: மூன்று அதிகாரிகள் உயிரிழப்பு
மும்பை: கடற்படைக் கப்பலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 3 இந்திய கடற்படை அதிகாரிகள் உயிரிழந்தனர்.
மும்பை கடற்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த போர்க்கப்பல் ஒன்றில் செவ்வாய்க்கிழமை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் மூன்று கடற்படை அதிகாரிகள் உயிரிழந்தனர். இதை மத்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. வெடிவிபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து கப்பல் ஊழியர்கள் உடனடியாக செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து அறிவதற்கு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி தங்க நாணயங்கள்;
மோசடி செய்த 2 பேர் கைது
மும்பை: கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் சிகாரிப்புராவைச் சேர்ந்த இரண்டு பேர், குறைந்த விலையில் தங்க நாணயங்கள் விற்பதாகக் கூறி, ஒருவரிடம் ரூ.5 லட்சம் பெற்றுக் கொண்டு அரை கிலோ தங்கக் கட்டிகளைக் கொடுத்தனர். அந்தத் தங்கத்தைச் சோதித்துப் பார்த்ததில் அது போலி தங்கம் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக
ஆனவெட்டியை சேர்ந்த ராமப்பா (வயது 44), சிகாரிப்புராவைச் சேர்ந்த திம்மப்பா (65) ஆகியோரை காவல்துறை கைது செய்தது. இவர்கள் இருவரும், பலரிடம் மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது.

