புதுடெல்லி: இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொவிட்-19 அன்றாடப் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. அதனையடுத்து அந்நாடு கொண்டாடவிருக்கும் குடியரசு தின விழாவில் வெளிநாட்டுத் தலைவர்கள் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் குடியரசு தின விழா வரும் 26ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. தலைநகர் டெல்லியில் நடைபெறவிருக்கும் அந்தக் கொண்டாட்ட விழாவில் வெளிநாட்டுத் தலைவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது வழக்கம்.
்மத்திய ஆசிய நாடுகளான உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பார்கள் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அன்றாடத் தொற்றுப் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்தை நெருங்கியுள்ளது. அதன் காரணமாகவே இந்த குடியரசு தின விழாவில் வெளிநாட்டுத் தலைவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடைபெறும் டெல்லியில் பலூன்கள், பாரா கிளைடர்கள், சிறு விமானங்கள் உள்ளிட்டவை பறப்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவை வழக்கமாக ஏறக்குறைய 125,000 பேர் பார்வையிடுவர். ஆனால், இப்போது தொற்று அச்சத்தின் காரணமாக 24,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அவர்களில் 19,000 பேர் மத்திய அரசின் சிறப்பு அழைப்பிதழைப் பெறுவர் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு 25,000 பேர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
குறிப்பாக சுகாதார, முன்களப் பணியாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.

