செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
c5df59b4-b9db-437d-9b4c-480706757746
-

இந்தியா-மத்திய ஆசியா முதல் உச்சநிலை மாநாட்டில் மோடி

புதுடெல்லி: இந்தியா-மத்திய ஆசியா முதல் உச்சநிலை மாநாட்டை பிரதமர் மோடி ஜனவரி 27ஆம் தேதி காணொளி மூலம் தொடங்கி நடத்துகிறார்.

அதில் கஜகஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாட்டு அதிபர்கள் பங்கேற்கிறார்கள். இந்திய-மத்திய ஆசிய உறவுகளைப் புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் பற்றியும் வட்டார பாதுகாப்பு நிலைமை குறித்தும் தலைவர்கள் விவாதிப்பார்கள் என்று இந்தியாவின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

'தங்க இந்தியாவை நோக்கி'

திட்டம் தொடக்கம்

புதுடெல்லி: 'தங்க இந்தியாவை நோக்கி' எனும் தேசிய விழாவை பிரதமர் மோடி நேற்று காணொளி மூலம் தொடங்கிவைத்தார். 30க்கும் மேற்பட்ட இயக்கங்கள், 15,000க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் உட்பட சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டு விழாவை ஒட்டி பிரம்ம குமாரிகளால் அர்ப்பணிக்கப்பட்ட ஓராண்டு கால முயற்சிகள் அந்த விழாவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

டெல்லியில் கடும் பனி, பாதிப்பு

புதுடெல்லி: தலைநகர் புதுடெல்லியில் கடும் மூடுபனி காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பனிமூட்டம் காரணமாக வட மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வரவேண்டிய 13 ரயில்கள் நேற்று தாமதமாக வந்துகொண்டு இருந்தன. புதுடெல்லியில் 10 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை நேற்றுப் பதிவாகியது.

426 பேர் உயிர் தப்பினர்

பெங்களூரு: பெங்களூரு அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த 7ஆம் தேதி அதிகாலை ஒரே நேரத்தில் புறப்பட்டு மேலே செல்ல இண்டிகோ நிறுவனத்தின் இரண்டு விமானங்களுக்கு அதிகாரிகள் அனுமதி கொடுத்துவிட்டனர்.

இதையடுத்து கோல்கத்தாவுக்கும் புவனேஸ்வர் நகருக்கும் புறப்பட்டுச் சென்ற அந்த இரு விமானங்களும் 3,000 அடி உயரத்தில் ஒன்றை ஒன்று நோக்கி நெருங்கி வந்து கொண்டிருந்தன. ஆனால் ரேடார் அதிகாரிகள் அதைக் கண்டு உடனடியாக விமானிகளுக்குத் தகவல் கொடுத்து விபத்தைத் தவிர்த்துவிட்டனர். இரண்டு விமானங்களிலும் இருந்த 426 பேரும் தப்பினர்.

நேரடி முதலீடு 26% குறைவு

புதுடெல்லி: இந்தியாவுக்கு 2021ல் வந்த நேரடி முதலீடு 26% குறைந்துவிட்டதாக ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது. 2020ல் பதிவான நிறுவன இணைப்பு-பற்றுமான உடன்பாடு கள் 2021ல் மறுபடியும் ஏற்படாததே இதற்கான காரணம் என்று அது குறிப்பிட்டுள்ளது.