கழுகுகள் கடத்தல்; ஆடவர் கைது
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து மும்பை புறப்பட்ட சுல்தான்பூர்-மும்பை விரைவு ரயிலில் பயணம் செய்த ஃபரீத் ஷேக், 60, என்பவர், அரிய வகை பறவை இனத்தைச் சேர்ந்த ஏழு எகிப்திய கழுகுகளுடன் பிடிபட்டார். அந்தப் பறவைகள் இறந்துவிட்டன. கடத்தலில் மேலும் பலருக்குத் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. படம்: இந்திய ஊடகம்
பெண்ணுக்கு சொத்து; புதிய விதி
புதுடெல்லி: தந்தை சொந்தமாக சம்பாதித்த சொத்தில் மகள்களுக்கும் பங்கு உண்டு என்ற சட்டம், 1956ஆம் ஆண்டுக்கு முன்னரும் செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்து வாரிசு உரிமைச் சட்டம், 1956ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது.
அதன்படி, மூதாதையரின் சொத்தில் ஆண் வாரிசு களுக்கு மட்டுமே பங்கு உண்டு என இருந்தது. பிறகு 2005ஆம் ஆண்டு அந்தச் சட்டப் பிரிவு 6ல் திருத்தம் இடம்பெற்று மூதாதையரின் சொத்தில் மகள்களுக்கும் சம உரிமை உண்டு என அறிவிக்கப்பட்டது.
சிறாருக்கு முகக்கவசம் வேண்டாம்
புதுடெல்லி: இந்தியாவில் ஐந்து வயது மற்றும் அதற்கு குறைந்த வயதுள்ள குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள புதிய கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
புதிய ஏவுகணை வெற்றி
புதுடெல்லி: உள்நாட்டு கருவிகள் அதிகளவில் பொருத்தப்பட்டு, மேம்படுத்தப்பட்ட செயல்திறனுடன் கூடிய பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை, ஒடிசா மாநிலம் சந்திப்பூர் கடற்பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்திலிருந்து நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த ஏவுகணை இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கியதாகத் தெரிவித்த தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அதில் தொடர்புடைய அனைவரையும் பாராட்டினார்.
இந்திய அரசு எச்சரிக்கை
புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவது, பொய்களைப் பரப்புவது, பிளவுபடுத்துவது போன்ற வகையில் செயல்படும் யூடியூப் தளங்கள் முடக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரசு, டிசம்பர் 21ஆம் தேதி மொத்தம் 20 யூடியூப் ஒளிவழிகளையும் இரண்டு இணையத்தளங்களை யும் முடக்கியது. இதைச் சுட்டிக்காட்டி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அந்த எச்சரிக்கையை விடுத்தார்.
நடிகை சாப்பிட்ட தோசையில் தங்க மூக்குத்தி, அதிர்ச்சி
திருவனந்தபுரம்: கேரளாவின் தொலைக்காட்சி நடிகையான சூரிய தாரா, படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குச் சென்ற வழியில் ஒரு கடையில் தோசை மாவு வாங்கி அதை வீட்டுக்குக் கொண்டுசென்று தோசை சுட்டார். தோசையை சாப்பிட்டபோது அதில் தங்க மூக்குத்தி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த நடிகை, அதைப் படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
"தோசை மாவை பையில் அடைத்தபோது எதிர்பாராத விதமாக மூக்குத்தி மாவில் விழுந்திருக்கலாம். இந்த தோசையை குழந்தைகள் சாப்பிட்டிருந்தால் உடல் நலனுக்கு பிரச்சினை ஏற்பட்டு இருக்கும்," என்று நடிகை கவலை தெரிவித்தார்.

