பெங்களூரு: கர்நாடக, தமிழக எல்லைப் பகுதியில் தமிழகம் தன்னிச்சையாக எத்தகைய பணிகளையும் மேற்கொள்ள முடியாது என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் கோவிந்த் கார்ஜோல் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்துக்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்கும் என்றார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் ரூ.4,600 கோடி மதிப்பில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்டம் நிறைவேற்றப்படும் என அறிவித்தார்.
இதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் கோவிந்த் கார்ஜோல், இந்தத் திட்டம் குறித்து தமிழக அரசு இதுவரை உச்ச நீதிமன்றத்திலும் காவிரி மேலாண்மை ஆணையத்திலும் எந்த விவரமும் தெரிவிக்கவில்லை என்றார்.
"ஒகேனக்கல் பகுதியானது கர்நாடக, தமிழக எல்லையில் அமைந்துள்ளது. அங்கு தமிழக அரசு மட்டும் தன்னிச்சையாக இத்தகைய பணிகளை மேற்கொள்ள முடியாது.
"காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு, உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படியே தமிழக அரசு செயல்பட வேண்டும்.
"உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள அளவு நீரையே கர்நாடகா தமிழகத்துக்கு திறந்துவிடும். இந்த திட்டத்துக்காக கூடுதல் நீர் திறந்துவிடப்படாது.
"காவிரி மேலாண்மை ஆணையம், கர்நாடகாவின் அனுமதியைப் பெறாமல் தமிழக அரசு ஒருதலைப்பட்சமாக அறிவித்துள்ள இந்த திட்டத்தை கர்நாடக அரசு எதிர்க்கும்," என்றார் கோவிந்த் கார்ஜோல்.

