தெருநாய்கள் கடித்து சிறுமி பலி
போபால்: தெருவில் சுற்றித் திரிந்த நாய்கள் கடித்துக் குதறிய தில் மூன்று வயதுச் சிறுமி உயிரிழந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பட்லியா கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. நேற்று முன்தினம் பெற்றோர் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, அருகே உள்ள இடத்தில் விளையாடிக்கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி. அப்போது திடீரென அங்கு கூட்டமாக வந்த தெரு நாய்கள் சில, சிறுமி மீது பாய்ந்து கடித்துக் குதறின. வலி தாங்க இயலாமல் சிறுமி கதறியதைக் கேட்டு பெற்றோர் பதறியடித்து ஓடிவந்தனர். நாய்களை விரட்டியடித்த பின்னர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்த போதும், பலன் இன்றி சிறுமி இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மகளைச் சீரழித்த ஆடவரை நீதிமன்றத்தில் சுட்டுக்கொன்ற தந்தை
பாட்னா: மகளை பாலியல் வன்கொடுமை செய்தவரை நீதிமன்றத்தில் வைத்து தந்தை சுட்டுக்கொன்ற சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முசாபர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பகவத் நிஷாத். இவரது வீட்டின் அருகே மிதிவண்டிக் கடை வைத்திருந்த தில்ஷாத் ஹுசைன் என்பவர், 2020ஆம் ஆண்டு பகவத்தின் 18 வயது நிரம்பாத மகளை கடத்திச் சென்றார். பின்னர் அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய அவரை தீவிர தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஹைதராபாத்தில் வைத்து காவல்துறை கைது செய்தது. கடத்தப்பட்ட சிறுமியும் மீட்கப்பட்டார். இந்நிலையில், பீகார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப் பட்டார் தில்ஷாத். நேற்று முன்தினம் நீதிமன்ற வளாகத்தில் அவர் தனது வழக்கறிஞருக்காக காத்திருந்தபோது அங்கு வந்த பகவத், திடீரென தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து தில்ஷாத்தை சரமாரியாக சுட்டதில் தில்ஷாத் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.
உத்தரப் பிரதேச தேர்தல்: அகிலேஷ் யாதவ் கர்ஹால் தொகுதியில் போட்டி
லக்னோ: உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்லில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கர்ஹால் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் நேரடித் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை. சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்தால் தகவல் தொழில்நுட்பத்துறையில் 2.2 மில்லியன் இளையர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப் படும் என அவர் வாக்குறுதி அளித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் 10ஆம் தேதி தொடங்கி மார்ச் 3ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
மருந்தகத்தில் வெடித்த 'பார்சல்' வெடிகுண்டு: இருவர் கவலைக்கிடம்
கோல்கத்தா: மேற்கு வங்கத்தில் மருந்தகத்தில் பார்சல் வெடிகுண்டு வெடித்ததில், நான்கு பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் அவர்களில் இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. அங்குள்ள உத்தர் தினஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அந்த மருந்தகத்தில் வெள்ளிக்கிழமை மதியம் திடீரென குண்டு வெடித்தது. ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர் அந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்த பொட்டலத்தை மருந்தகத்தில் கொடுத்ததாகவும் இந்தச் சம்பவத்தில் ஒரு பெண்ணுக்குத் தொடர்பு இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இதன் பின்னணியில் தீவிரவாத தொடர்புகள் ஏதேனும் உள்ளனவா என தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
மோடி: இந்தியா மின்னிலக்க வடிவில் புரட்சியைக் கண்டு வருகிறது
புதுடெல்லி: மின்னிலக்க வடிவில் இந்தியா ஒரு புரட்சியைக் கண்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மின்னி லக்க உள்கட்டமைப்பு அனைத்து கிராமங்களையும் சென்றடைய வேண்டும் என்று அவர் நேற்று நடைபெற்ற மாவட்ட ஆட்சி யாளர்கள் மாநாட்டில் பேசியபோது குறிப்பிட்டார். "மத்திய அரசின் சேவைகள் மக்களுக்கு நேரடியாக அவர்களின் வீடுகளுக்கே சென்றடைய வேண்டும். எந்த மாவட்டமும் பின் தங்கிவிடக்கூடாது. மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து சவாலைச் சந்திக்க வேண்டும்," என்றார் பிரதமர் மோடி.

