புதுடெல்லி: இந்தியாவின் குடியரசு தின விழா ஆண்டுதோறும் ஜனவரி 26ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தக் கொண்டாட்டம் புதுடெல்லியில் பல்வேறு நிகழ்ச்சி களுடன் நான்கு நாட்களுக்கு நீடிக்கும். நாடு முழுவதிலும் இருந்து பாதுகாப்புப் படைகள் டெல்லிக்கு வருவது வழக்கம்.
பின்னர் ஜனவரி 29ஆம் தேதி குடியரசு தின கொண்டாட்டங்களின் நிறைவு நாளில் முப்படை களின் தலைவரான இந்திய அதிபர் டெல்லிக்கு வந்த பாதுகாப்பு படைகளை மீண்டும் தங்கள் முகாம் களுக்கு முறைப்படி திருப்பியனுப்பி வைப்பாா். பாதுகாப்புப் படைகள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்ச்சியாக இது நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்வின்போது இந்தியாவின் தந்தை என்று போற்றப்படும் மகாத்மா காந்திக்குப் பிடித்தமான 'என்னுடன் இருங்கள்' என்ற பாடல் வழக்கமாக இசைக்கப்படும். பிரிட்டிஷ் கவிஞர் ஹென்றி பிரான்சிஸ் லைட் என்பவர் 1847ல் இந்த கிறிஸ்துவ பாடலை இயற்றியிருந்தார். 1950ஆம் ஆண்டு முதலே குடியரசு தின நிகழ்ச்சியில் இந்தப் பாடல் இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில் இவ்வாண்டு பாசறைக்கு திரும்பும் நிகழ்வில் அந்தப் பாடல் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதற்குப் பதில் கவிஞா் முகமது இக்பால் எழுதிய 'சாரே ஜஹான் சே அச்சா' (ஒட்டுமொத்த உலகில் இந்தியா மேலானது) என்ற பாடல் இசைக்கப்படவுள்ளதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதற்கிடையே இந்திய விடு தலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள தமது டுவிட்டர் பதிவில் இந்திய தேசத்திற்கு நேதாஜியின் பங்களிப்பு ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை அளிக் கிறது என்று குறிப்பிட்டு உள்ளார்.
முன்னதாக 'இந்தியா கேட்' பகுதியில் கிரானைட் கற்களால் செய்யப்பட்ட நேதாஜியின் பிரம் மாண்ட சிலை நிறுவப்படும் என்று பிரதமர் அறிவித்திருந்தார்.
இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்த் தமது டுவிட்டர் பதிவில் நேதாஜியின் லட்சியமும் தியாகமும் ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்க மளிக்கும் என்று தெரிவித்தார். "இந்திய ராணுவத்தை உருவாக்கிய பெருமை நேதாஜியைச் சேரும். 'வங்கத்துச் சிங்கம்' என்று இன்றும் அவர் மக்களால் போற்றப்படுபவர்," என்றும் அவர் கூறியிருந்தார்.

