செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
d96b948c-85fa-4b3b-9107-383dc1302668
-

இராமானுஜரின் பிரம்மாண்ட சிலை

புதுடெல்லி: எட்டு எழுத்து மந்திரத்தை உலகறியச் செய்த வைணவ மகான் ஸ்ரீ இராமானுஜரின் 1,000ஆம் ஆண்டின் நிறைவு நினைவுச் சின்னமாக அவருக்கு ஹைதராபாத்தில் உள்ள திரிகண்டி சின்ன ஜீயர் சுவாமிகளின் மடத்தில் 34 ஏக்கர் பரப்பளவில் 216 அடி உயர ஐம்பொன்னாலான 'சமத்துவ சிலை' நிறுவப்பட்டுள்ளது என்று இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்தது. இதனை பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்க உள்ளார். ஆளவந்தாரை தொடர்ந்து வைணவ பீடத்துக்கு தலைமை தாங்கி, அதனை சீரமைத்து ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இன்று வரை வைணவத்தை தழைத்தோங்க செய்த மகான்தான் இராமானுஜர். தனக்கு போதித்த 8 எழுத்து மந்திரத்தை உலகறியச் செய்ய கோயில் கோபுரம் மீதேறி அனைவருக்கும் போதித்தவர்.

இராமானுஜர், தான் வாழும் காலத்தில் மனித இனத்தில் இருந்த தீண்டாமையை ஒழிக்க பிள்ளையார் சுழி போட்ட வைணவ நாயகன்.

துணை அதிபருக்கு தொற்று

புதுடெல்லி: இந்தியாவின் துணை அதிபர் வெங்கையா நாயுடுவுக்கு நேற்று தொற்று இருப்பது கொரோனா பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த நிலையில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளும்படி துணை அதிபர் அலுவலகம் கேட்டுக் கொண்டது.

மும்பை அருகே ஆமைகள் பலி

மும்பை: மும்பைக்கு அருகில் உள்ள ஆற்றில் 12க்கும் மேற்பட்ட ஆமைகள் மடிந்துகிடந்தன. மும்பைக்கு கிழக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் கல்யாண் என்ற இடத்தில் நீர்நிலையைச் சுற்றி துர்நாற்றம் வீசுவதை விசாரிக்க வேண்டும் என்று உள்ளூர் அரசியல்வாதி கேட்டுக்கொண்டதால் அங்கு சென்ற வனவிலங்கு பாதுகாப்பாளர்கள் ஆமைகள் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளூர்க்காரர்கள் நச்சுணவைக் கொடுத்திருக்கலாம் என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் வனவிலங்கு, ஊர்வன மீட்புக் குழுவைச் சேர்ந்த சுஹாஸ் பவார் கூறியுள்ளார்.

'60% இறப்புகளுக்கு அது காரணம்'

புதுடெல்லி: இந்தியாவில் 3வது கொரோனா அலையில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளில் 60 விழுக்காட்டினர் முதலாவது இரண்டாவது முறை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் என்று டெல்லி மேக்ஸ் ஹெல்த்கேர் மருத்துவ நிபுணர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்கிடையே இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 2வது நாளாக சற்றுக் குறைந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி முந்தைய 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 33,533 பேர் பாதிக்கப்பட்டனர். இது, முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் 4,171 குறைவு.