புதுடெல்லி: குடியரசு தின விழாக் கொண்டாட்டம் டெல்லியில் தொடங்கி உள்ளது. இதையொட்டி,டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் மறைக்கப்பட்ட அடையாளங்களைப் புதுப்பிப்போம் என்று குறிப்பிட்டார்.
முன்னதாக, இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் சிலையை அவர் திறந்து வைத்தார். டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்துக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அடிபணியவில்லை என்றும் அவர்களை எதிர்த்து வீர தீரத்துடன் போரிட்டார் என்றும் பிரதமர் புகழ்ந்துரைத்தார்.
"இப்போது 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகி றோம். இது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். நேதாஜியிடம் இருந்து பெற்ற உத்வேகத்துடன் நாட்டை முன்னேற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம். இந்தியாவின் மறைக்கப்பட்ட அடையாளங்களைப் புதுப்பிப்போம்," என்றார் பிரதமர் மோடி.
எதிர்வரும் 2047ஆம் ஆண்டில் நாடு நூறாவது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் வேளையில், புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, அதை எட்டிப்பிடிக்க அனைத்துத் தரப்பினரும் கடினமாக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கிடையே நேரம், இடப்பற்றாக்குறை காரணமாக குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் நாளை நடைபெற உள்ள அணிவகுப்பில் 12 அலங்கார ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள், இரண்டாவது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் குடியரசு தின விழாவில் பங்கேற்க அனுமதி இல்லை என்றும் விழாவுக்கு வரும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து, உரிய வகையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது.

