மத்திய அரசு: ஓமிக்ரான் தொற்று சமூகப் பரவலாக மாறிவிட்டது

மத்திய அரசு: ஓமிக்ரான் தொற்று சமூகப் பரவலாக மாறிவிட்டது

2 mins read
e048667b-b7c0-45ec-80c4-356bddba6d50
-

நாடாளுமன்ற வளாகத்தில் 875 பேருக்கு தொற்றுப் பாதிப்பு

புது­டெல்லி: ஓமிக்­ரான் தொற்­றுப் பாதிப்பு இந்­தி­யா­வில் சமூ­கப் பர­வ­லாக மாறி­யுள்­ளது என இந்­திய கொரோனா மர­பி­யல் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.

இது மத்­திய சுகா­தார அமைச்­சின் கீழ் செயல்­படும் அமைப்­பா­கும்.

இதன் கீழ் 38 ஆய்­வ­கங்­கள் உள்­ளன. இந்த ஆய்­வ­கங்­க­ளில்­தான் கொரோனா தொற்­றுப் பாதிப்­புக்கு ஆளா­ன­வர்­க­ளின் மாதி­ரி­கள் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

அதன் மூலம் கொரோனா தொற்­றின் எந்த வகை­யான பாதிப்பு என்­பது கண்­ட­றி­யப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், ஓமிக்­ரான் பாதிப்பு குறித்து இந்த அமைப்பு மேற்­கொண்ட அண்­மைய ஆய்­வின் மூலம் புதிய தக­வல்­கள் தெரி­ய­வந்­துள்­ளன.

இந்­தி­யா­வில் ஓமிக்­ரான் பாதிப்பு தற்­போது சமூகப் பரவலாக மாறி உள்­ளது என்­றும் குறிப்பாக நகர்ப்புறங்­களில் இந்­தப் பாதிப்பு வேகமாகப் பரவி வரு­கிறது என்­றும் கொரோனா மர­பி­யல் கூட்­ட­மைப்­பின் ஆய்­வ­றிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

"அண்­மை­யில் ஐஎச்யு என்று குறிப்­பி­டப்­படும் கொரோனா கிரு­மி­யின் புதிய வகைப் பாதிப்­பும் இந்­தி­யா­வில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. எனி­னும் இந்­தப் புதிய வகை நாட்­டில் வேக­மா­கப் பர­வ­வில்லை. இதன் தாக்­க­மும் பாதிப்­பும் தீவி­ர­மா­கக் கண்­கா­ணிக்­கப்­பட்டு வரு­கிறது," என்று கொரோனா மர­பி­யல் கூட்­ட­மைப்பு மேலும் தெரி­வித்­துள்­ளது.

நாடா­ளு­மன்ற வளா­கத்­தில்

875 பேருக்­குப் பாதிப்பு

இதற்­கி­டையே, நாடா­ளு­மன்ற வளா­கத்­தில் 875 பேருக்கு கொரோனா தொற்­றுப் பாதிப்பு இருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

இவர்­களில் 271 பேர் மாநி­லங்­க­ளவை செய­லக ஊழி­யர்­கள், அதி­கா­ரி­கள் ஆவர். மிக விரை­வில் நாடா­ளு­மன்­றக் கூட்­டத்­தொ­டர் தொடங்க இருக்­கிறது. அப்­போது நிதி­நிலை அறிக்கை தாக்­கல் செய்­யப்­பட உள்­ளது.

எனவே, நாடா­ளு­மன்ற ஊழி­யர்­கள் அனை­வ­ரும் கொரோனா வழி­காட்டி நெறி­மு­றை­களை முழு­மை­யா­கப் பின்­பற்ற வேண்­டும் என அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

கர்­நா­டக நில­வ­ரம்

நாடு முழு­வ­தும் தொடர்ந்து மூன்­றா­வது நாளாக ஞாயி்ற்­றுக்­கி­ழமை அன்று அன்­றாட தொற்று எண்­ணிக்கை குறை­வாக பதி­வா­னது. நேற்று முன்­தி­னம் புதி­தாக 306,064 பேருக்கு கிருமி தொற்­றி­யுள்­ளது. சனிக்­கி­ழ­மை­யை­விட இது 31,000 ஆயி­ரம் குறை­வா­கும்.

கர்­நா­ட­கா­வில் ஞாயிற்­றுக்­கி­ழமை புதிய உச்­ச­மாக 50,210 பேருக்கு கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­நி­லை­யில் அங்கு வயது வந்­தோ­ரில் அனை­வ­ருக்­கும் (100%) ஒரு தடுப்­பூ­சி­யே­னும் போடப்­பட்­டுள்­ள­தாக அம்­மா­நில சுகா­தா­ரத்­துறை அறி­வித்­துள்­ளது.

மேலும், சுமார் 85 விழுக்­காட்­டி­ன­ருக்கு இரண்­டா­வது தடுப்­பூ­சி­யும் சிறார்­களில் 29 விழுக்­காட்­டி­ன­ருக்கு முதல் தடுப்­பூ­சி­யும் போடப்­பட்­டுள்­ள­தாக மாநில சுகா­தார அமைச்­சர் சுதா­கர் கூறி­யுள்­ளார்.

மகாராஷ்டிர நில­வ­ரம்

மகா­ராஷ்­டி­ரா­வில் நேற்று முன்­தினம் மேலும் 44 பேர் தொற்­றுக்­குப் பலி­யா­கி­விட்­ட­னர். ஒரே நாளில் 40,805 பேருக்கு கிருமி தொற்­றி­உள்­ளது.