சண்டிகர்: வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள முடிவுசெய்துள்ளன.
இதற்காக 22 விவசாய சங்கங்கள் அடங்கிய சம்யுக்தா சமாஜ் மோர்ச்சா என்ற அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளது.
80 வயதான மூத்த விவசாயி பல்பீர் சிங் ராஜே வால் என்பவர் இக்கட்சிக்கு தலைமை ஏற்றுள்ளார்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் நிலைமை மோசமாக இருப்பதாகவும் அதை மாற்றி முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் நோக்கத்துடனேயே தேர்தல் களம் காண்பதாகவும் பல்பீர் சிங் தெரிவித்துள்ளார்.
"பஞ்சாப் மாநில இளைஞர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகமாகிவிட்டதால் அவர்கள் வேறு மாநிலங்களுக்குச் செல்கின்றனர். வேலை வாய்ப்புகள் இல்லையென்றால் குற்றங்கள் அதிகரிக்கும்," என்றார் பல்பீர் சிங்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தங்கள் கட்சி போட்டியிடும் என்று குறிப்பிட்டுள்ள அவர், பாரம்பரிய கட்சிகள் மீது நம்பிக்கை இழந்த மக்கள், தேர்தலில் போட்டியிடுமாறு தங்களிடம் வலியுறுத்தியதாக கூறி உள்ளார்.
"மக்களுக்குச் சேவை செய்யும் நோக்கத்தில் இருந்து அரசியல் வாதிகள் விலகியுள்ளனர். இதனால் சாமானிய மக்கள் சிரமப்படுகின்றனர். அரசியல் கட்சிகளால் உருவாக்கப்பட்ட அசுத்தத்தை நாங்கள் அகற்ற வேண்டும் என மக்கள் விரும்பியதால் தேர்தலில் போட்டியிட முடிவு எடுக்கப்பட்டது," என்கிறார் பல்பீர் சிங். முன்னதாக, விவசாய சங்கங்கள் சில தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை எனத் தெரிவித்திருந்தன.

