செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
d8b34acd-c51d-4051-8836-686809e19673
-

நேதாஜி ஆவணங்கள்: மம்தா கோரிக்கை

புதுடெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மரணம் தொடர்பான மர்மம் நீடிப்பது மேற்குவங்கத்தைப் பொறுத்தவரை மிகவும் உணர்வுபூர்வமான விஷயம் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கோல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நேதாஜி தொடர்பான கோப்புகளை மத்திய அரசு எப்போது முழுமையாக வெளியிடும் என்று கேள்வி எழுப்பினார். மேலும், ஜப்பானில் உள்ள நேதாஜியின் அஸ்தி எனக் கூறப்படும் பொருளை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.

காஷ்மீரில் 50,000 கோடி ரூபாய் முதலீடு: அமித் ஷா நம்பிக்கை

புதுடெல்லி: நாட்டின் வளர்ச்சி அடைந்த பகுதியாக காஷ்மீர் உருவெடுப்பதை யாராலும் தடுக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மத்திய அரசின் சிறந்த தொழில் கொள்கைகள் காரணமாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் செய்ய வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே, ஜம்மு காஷ்மீரில் 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டில் பல்வேறு திட்டங்கள் கையெழுத்தாகி உள்ளதாகவும் அதன் மூலம் ஐந்து லட்சம் இளையர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.

சிறுவனைக் கடித்துக் கொன்ற சிறுத்தை

லக்னோ: ஆறு வயது சிறுவனை சிறுத்தை கடித்துக்கொன்ற சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள மோதிபூர் மலைத்தொடர் அருகே பெற்றோருடன் வசித்து வந்த சிறுவன் சாஹில், நேற்று முன்தினம் தன் வீட்டுக்கு வெளியே சில குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, திடீரென அங்கு வந்த ஒரு சிறுத்தையைக் கண்டு குழந்தைகள் அலறியடித்து ஓட்டம்பிடிக்க, சிறுவன் சாஹில் மட்டும் சிறுத்தையிடம் சிக்கிக் கொண்டான். அவனது கழுத்தைக் கவ்விய சிறுத்தை, அங்கிருந்து சிறுவனை இழுத்துச் செல்ல முயன்றபோது அப்பகுதி மக்கள் திரண்டு வந்து கூச்சலிட்டனர். இதனால் சாஹிலை விட்டுவிட்டு சிறுத்தை ஓட்டம் பிடித்தது. சிறுவன் சாஹில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் முன்பே பரிதாபமாக உயிரிழந்தான்.

பாஜக கூட்டணியால் 25 ஆண்டுகள் வீணாயின என்கிறார் உத்தவ் தாக்கரே

மும்பை: சிவசேனா கட்சி, பாஜகவுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை வீணடித்துவிட்டது என தாம் கருதுவதாக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். பாஜகவின் இந்துத்வா என்பது வெறும் சந்தர்ப்பவாத கொள்கை என்றும் அதிகாரத்தைக் கைப்பற்ற மட்டுமே அதைப் பயன்படுத்துகிறது என்றும் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது அவர் சாடினார். "சிவசேனாவைப் பொறுத்தவரை பாஜக மட்டும்தான் கூட்டணியை விட்டு வெளியேறி உள்ளது. ஆனால், இந்துத்துவா கொள்கையை நாங்கள் கைவிடவில்லை," என்று கூறியுள்ளார் முதல்வர் உத்தவ் தாக்கரே.

பேரிடர் மீட்புப் படை இணையத்தளம் இணைய ஊடுருவிகளால் முடக்கம்

புதுடெல்லி: இணைய ஊடுருவல்காரர்களால் தேசிய பேரிடர் மீட்புப் படையின் இணையத்தளம் முடக்கப்பட்டது. இது குறித்து டெல்லி காவல்துறையினர் இணையக் குற்றப்பிரிவில் அளிக்கப்பட்ட புகார் பற்றிய விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் திடீரென இணையத்தளம் முடக்கப்பட்ட நிலையில், தொழில்நுட்ப வல்லுநர்கள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு அதை மீட்டனர். இணையத்தளம் யாரால் முடக்கப்பட்டது எனத் தெரியவில்லை.

பேரனின் இறப்புச் செய்தி கேட்டு அதிர்ச்சியில் 74 வயது முதியவர் மரணம்

திருவனந்தபுரம்: பேரனின் மரணச் செய்தியைக் கேட்ட 74 வயது முதியவர் அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள நெடுங்காடு கடையரா பகுதியைச் சேர்ந்த சுகுமாரனின் பேரன் அக்‌ஷய் ஆறாம் வகுப்பு படித்து வந்தான். 12 வயதான அக்‌ஷய்க்கு அண்மையில் சிறு கட்டி ஏற்பட்டது. அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை குளியலறையில் மயங்கி விழுந்துள்ளான். இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அச்சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தான். மரணத்துக்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், தன் மகள் வழி பேரனின் மரணச் செய்தியைக் கேள்வியுற்ற சுகுமாரன், அதிர்ச்சியில் மயங்கி விழுந்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவரது உயிர் பிரிந்தது. சுகுமாரனுக்கு மனைவியும் மேலும் இரு மகன்களும் உள்ளனர்.