சண்டிகர்: இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களுக்குத் தனித்தனியாக வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
ஒருவர், மற்றவர் வாக்களிப்பதைப் பார்க்காமல் இருக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று பஞ்சாப் மாநிலத்தின் தலைமை தேர்தல் அதிகாரி எஸ். கருணா ராஜு கூறியுள்ளார்.
அமிர்தசரஸ் நகரத்தைச் சேர்ந்த இரட்டையர்களான சோஹன் சிங், மோஹன் சிங் ஆகிய இருவரும் சோஹனா, மோஹனா என்று அன்பாக அழைக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு அவர்களுக்கு 18 வயது பூர்த்தியானது. அவர்களுக்கு இரு வெவ்வேறு வாக்காளர் அட்டைகளை வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.
இந்த நிலையில் முதல் முறையாக வாக்கு அளிக்கவிருப்பவர்களுக்கு வாக்காளர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அப்போது ஒட்டிப் பிறந்த சோஹனா, மோஹனா ஆகியோருக்கும் இரு வெவ்வேறு வாக்காளர் அட்டை வழங்கப்பட்டது.
இந்த விழாவில் 'உங்கள் வேட்பாளர்களை அறிந்து கொள்ளுங்கள்' எனும் கைபேசி செயலியையும் தேர்தல் அதிகாரி திரு ராஜு அறிமுகப்படுத்தினார்.