மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் அண்மையில் தொடர்ந்து கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன.
உலகம் முழுவதும் கொரோனா தாக்கத்தால் பொருளாதாரம் பற்றிய கவலை நிலவும் வேளையில், பல்வேறு நாடுகளும் தொழில்துறைக்கு ஊக்கம் தரும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
அதன் எதிரொலியாக இந்தியப் பங்குச் சந்தைகளும் கடந்த பத்து மாதங்களாக கடும் ஏற்றத்தில் இருந்தன.
மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 60 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து புதிய சாதனை படைத்தது.
இந்நிலையில், தென்ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா கிருமி கண்டறியப்பட்டது. இதனால் உலகெங்கும் முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், இந்தியப் பங்குச்சந்தைகள் கடந்த வாரமும் இந்த வாரமும் பெரும் சரிவைச் சந்தித்தன.
இதனால் முதலீட்டாளர்களுக்கு சுமார் 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த சரிவு நேற்றும் நீடித்தது.
நேற்று காலை 9:26 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 1,011 புள்ளிகள் சரிந்து 56,847 ஆக இருந்தது. என்எஸ்இ நிஃப்டி 180 புள்ளிகள் சரிந்து 16,998 ஆக இருந்தது.
உலகளாவிய அளவில் பங்குச் சந்தைகள் சரிந்ததால், இந்திய பங்குச் சந்தைகள் நேற்று கடுமையாக சரிந்ததாகக் கூறப்படுகிறது.
ஆசியப் பங்குச்சந்தைகளில் பங்குகள் 14 மாதங்களில் இல்லாத அளவு சரிவை எதிர்கொண்டன.
அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதம் தொடர்பான கணிப்பால் டாலர் மதிப்பு உயர்ந்தது. இதன் எதிரொலியால் உலகளவில் பங்குச்சந்தைகள் சரிவடைந்தன.
மேலும், ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையிலான அரசியல் பதற்றங்கள் குறித்த கவலையாலும் முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பங்குகளை விற்பனை செய்வதாகத் தெரிகிறது.