உ.பி.யில் கள்ளச்சாராயம்
குடித்த ஒன்பது பேர் உயிரிழப்பு
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த ஒன்பது பேர் உயிரிழந்தனர். 29 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டம் பஹர்பூர் என்ற சிற்றூரில் செவ்வாய்க்கிழமை மாலை விழா ஒன்று நடந்தது. அதில் அந்த ஊரைச் சேர்ந்த ஏறக்குறைய 40 பேர் மது அருந்தினர். அவர்களில் வயதான பெண்மணி ஒருவர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். 29 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
காவல்துறை நடத்திய முதல்கட்ட விசாரணையில் இறந்தவர்கள் அனைவரும் கள்ளச்சாராயம் குடித்திருந்தது தெரியவந்தது.
அன்றாடத் தொற்று 286,384 ஆனது
புதுடெல்லி: இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி 24 மணி நேரத்தில் 286,384 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை மத்திய அரசின் சுகாதார அமைச்சு ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்தது.
நாடு முழுவதும் புதன்கிழமை மட்டும் 573 தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளன. நாட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,202,472 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை தொற்று பாதிப்பு 41,400 ஆக குறைந்த நிலையில் அது நேற்று முன்தினம் மீண்டும் அதிகரித்து 50 ஆயிரத்தை நெருங்கியதாக அம்மாநிலத்தின் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஓமிக்ரான் அச்சுறுத்தலால் ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் மூடப்பட்ட பள்ளிக்கூடங்கள் இப்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
டாடா குழுமத்திடம் ஏர் இந்தியா அதிகாரபூர்வமாக ஒப்படைப்பு
புதுடெல்லி: இந்திய அரசாங்க நிறுவனமான ஏர் இந்தியா நேற்று டாடா சன்ஸ் குழுமத்திடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. கடன்சுமை போன்ற காரணங்களால், நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. டாடா சன்ஸ் குழுமம் அதனை ரூ.18 ஆயிரம் கோடிக்கு வாங்கியதாக கடந்த ஆண்டு அக்டோபரில் அறிவிக்கப்பட்டது. எனினும் ஒரு சில அமைப்புகளின் அனுமதி கிடைக்காததால், ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் நிறுவனம் கையகப்படுத்தும் பணிகளில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு, நேற்று ஏர் இந்தியா நிறுவனம், டாடா சன்ஸ் குழுமத்திடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

