பாட்னா: பீகார் ரயில்வே பணியாளர் தேர்வு எதிர்ப்பு வன்முறைப் போராட்டம் தொடர்பாக யூடியூப் சேனல் நடத்தி வரும் 'கான் சார்' என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களை வன்முறைக்குத் தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கான் சார், பீகாரில் பிரபலமானவர்.
அவர் மீதான வழக்குப் பதிவு, போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. அரசியல்வாதிகளும் அவர் மீதான வழக்குப் பதிவை எதிர்த்துள்ளதால் பீகார் மாநிலத்தில் இது முக்கிய விவகாரமாக உருவெடுத்துள்ளது.
போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தும் கான் மீது போராட்டத்தின்போது வன்முறையைத் தூண்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. போராட்டம் நடத்த மாணவர்களை அவர் தூண்டியதாகக் கூறப்படும் காணொளி, சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து வழக்கு பதியப்பட்டுள்ளது.
அதுகுறித்துப் பேசிய கான், "வன்முறையில் எனது பங்கு இருந்தால், என்னைக் கைது செய்யுங்கள். இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியதற்கு ரயில்வே பணியாளர் வாரியமே பொறுப்பு. வாரியத்தின் முடிவு பட்டதாரி மாணவர்களுக்கு மட்டுமே பயனளிக்கும்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக, ரயில்வே தேர்வுமுறையை எதிர்த்துப் பல்வேறு ரயில் நிலையங்களில் ரயில்களை மறித்தும் ரயில்கள் மீது கற்களை வீசியும் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
கயாவில் காலியாக நின்றுகொண்டிருந்த ரயில் ஒன்றுக்கு மாணவர்கள் தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது. தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

