புதுடெல்லி: மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகியவற்றுடன் இந்தியாவும் இணைந்த இந்தியா-மத்திய ஆசிய நாடுகள் ஒத்துழைப்புக்கான உச்சநிலை மாநாடு முதல் முறையாக வியாழக்கிழமை நடந்தது. மாநாட்டில் மேற்கண்ட ஐந்து நாடுகளின் அதிபர்களான காசம்-ஜோமார்ட் தொகயேவ் (கஜகஸ்தான்), ஷவ்கத் மிர்சியோயேவ் (உஸ்பெகிஸ்தான்), எமோமலி ரஹ்மான் (தஜிகிஸ்தான்), கர்பங்குலி பெர்டிமுகமதோவ் (துர்க்மெனிஸ்தான்), சதிர் ஜபரோவ் (கிர்கிஸ்தான்) ஆகியோர் பங்கேற்றனர்.
மெய்நிகர் வாயிலாக நடைபெற்ற இந்த உச்சநிலை மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
மாநாட்டில் தொடக்க உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தக் கூட்டமைப்பு வட்டாரப் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானது என்று கூறினார்.
"ஒருங்கிணைந்த, நிலையான, விரிவாக்கப்பட்ட அண்டை நாடு என்ற இந்தியாவின் பார்வைக்கு மத்திய ஆசியா மையமாக உள்ளது. நாம் அனைவரும் ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து அக்கறை கொண்டுள்ளோம்.
"இது இந்தியாவுக்கும், மத்திய ஆசியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை, வட்டார நிலைத்தன்மைக்கும் பாதுகாப்புக்கும் மிகவும் முக்கியமானதாக்குகிறது. அந்த வகையில், வட்டாரப் பாதுகாப்பு மற்றும் செழுமைக்கு இந்தியா - மத்திய ஆசியா இடையிலான ஒத்துழைப்பு அவசியம்," என்று பிரதமர் மோடி கூறினார்.

