செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
d03c22e1-c36f-4c30-8fbf-1892bad926c6
-

விபத்தால் ரயில்சேவை பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் ஷோரனூரிலிருந்து எர்ணாகுளம் செல்லும் பாதையில் ஆளுவா என்ற இடத்தில் சரக்கு ரயில் ஒன்று வியாழக்கிழமை தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அதனால் கேரளாவின் முக்கிய நகரங்களுக்குச் செல்லும் 11 ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வேயின் அறிக்கை தகவல் வெளியிட்டது. அதனையடுத்து குருவாயூர் - திருவனந்தபுரம் விரைவு ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. எர்ணாகுளம் - கண்ணனூர் விரைவு ரயிலும் நேற்று முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

சட்டமன்ற உறுப்பினர்கள் இடைநீக்க உத்தரவு ரத்து

புதுடெல்லி: மகாராஷ்டிரா சட்டசபையில் இருந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 12 பேர் ஓராண்டிற்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர். சட்டமன்றத்தில் தற்காலிக சபாநாயகரான ஜாதவ் கூட்டத்தை நடத்திய நிலையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

அவ்வாறு அமளி செய்த 12 பேரை இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய இந்திய உச்சநீதி மன்றம், அந்த இடைநீக்க உத்தரவை ரத்து செய்தது. அத்தகைய இடைநீக்க நடவடிக்கை அரசியலமைப்பிற்கு எதிரானது என்பதுடன், நியாயமற்றது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

'இந்தியாவின் எதிர்காலத்தை உ.பி. தேர்தல் முடிவுசெய்யும்'

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் 10-ம் தேதியிலிருந்து சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ள வேளையில், பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர்கள் பலரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மதுராவின் பிராஜ் பகுதியில் நேற்றுமுன்தினம் வாக்காளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம் வளர்ச்சி அடையவில்லை என்றால் ஒட்டுமொத்த இந்தியாவும் பின்தங்கும். எனவே, உத்தரப் பிரதேசத் தேர்தல் இந்தியாவின் எதிர்காலத்தை முடிவு செய்யும் தேர்தல் ஆகும்," என்று கூறினார். மேலும் அவர், "சமாஜ்வாதி ஓர் இனத்தினருக்காகவும், பகுஜன் சமாஜ் மற்றோர் இனத்தினருக்காகவும் பணியாற்றி இருக்கின்றன. ஆனால் முதல்முறையாக உத்தரப் பிரதேசத்தில் ஒட்டுமொத்த அளவில் வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளன," என்றார். "எந்தக் கட்சி அல்லது தத்துவம் மாநிலத்துக்குத் தேவை என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் சொல்லும். மாநிலத்தில் 5 ஆண்டுகளாகப் பதவியில் இருக்கும் யோகி ஆதித்யநாத் அரசு மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. எனவே வரும் தேர்தலிலும் பா.ஜ.க.வை ஆதரித்து வாக்களியுங்கள்" என்று அமித்ஷா கேட்டுக்கொண்டார்.