குர்தாஸ்பூர்: பஞ்சாப் மாநிலத்தையொட்டிய பாகிஸ்தானுடனான எல்லைப்பகுதியில் இந்தியப் பாதுகாப்புப் படையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று குர்தாஸ்பூரில் உள்ள சந்து வாடாலா பகுதியில் பாகிஸ்தான் கடத்தல்காரர்களுக்கும் இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அதில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயமடைந்தார். இருப்பினும் கடத்தல் முயற்சியை அதிகாரிகள் முறியடித்தனர்.
சம்பவத்தில் பாகிஸ்தான் கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்தப் பகுதியில் இருந்து 47 பைகளில் சுற்றி வைக்கப்பட்டிருந்த ஹெராயின், ஓபியம் போன்ற போதைப்பொருள்கள் எனச் சந்தேகிக்கப்படும் பொட்டலங்கள்(படம்), துப்பாக்கித் தோட்டாக்கள் ஆகியவற்றுடன் சீனத் துப்பாக்கி, கைத்துப்பாக்கி, வெடிமருந்துகள், ஏகே 47 ரகத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களையும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
மொத்தம் 47 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குர்தாஸ்பூரின் சந்து வடாலா சோதனைச்சாவடி அருகே நேற்று அதிகாலை 5:15 மணிக்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாட்டம் காணப்பட்டதை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்குக் கடத்தல்காரர்களும் சுடத் தொடங்கினர்.
இறுதியில் கடத்தல்காரர்கள் தங்களிடம் இருந்த அனைத்துப் பொருள்களையும் கைவிட்டுத் தப்பிச் சென்றதாகக் கூறப்பட்டது.
மோதலில் காயமடைந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரரின் உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

