மூணாறு அருகே நடந்த ஒரு கொடூரக் கொலைச் சம்பவத்தை கேரளக் காவல் துறை விசாரித்து வருகிறது.
கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான குண்டு மலை எஸ்டேட் எனும் இடத்தில் சம்பவம் நடந்தது.
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 29 வயது தேயிலைத் தோட்ட ஊழியர் ஒருவர், தலையில் வெட்டப்பட்டு, கண்கள் இரண்டும் பறிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
சரண்சாய் எனும் அந்த நபரின் சடலத்தை ஜனவரி 25ஆம் தேதி அன்று, அவர் வேலை செய்த தனியார் தோட்டத்தில் காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.
கொல்லப்பட்ட ஊழியர் சொந்த மாநிலத்தைச் சேர்ந்த வேறு இரண்டு ஊழியர்களுடன் மது அருந்தியதாக விசாரணையில் தெரிய வந்தது.
சக ஊழியர்கள் இருவரும்தான் கொலையில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
இருவரும் தலைமறைவானதால் ஜார்கண்ட்டிற்கு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
தனிப்படை அமைத்து இந்தச் சம்பவத்தை விசாரிக்கும் கேரள காவல் துறையினர், ஜார்கண்ட் மாநிலத்துக்குச் சென்று விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.