அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை; பெங்களூரு சிறையில் அடைப்பு
புதுடெல்லி: பங்குச் சந்தையில் 2,800 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்தது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கார்வி குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் கோமாண்டூர் பார்த்தசாரதி கைதாகி உள்ளார். அவர் அந்நியச் செலாவணி மோசடியிலும் ஈடுபட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து கார்வி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி கிருஷ்ணா ஹரியையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுகளை அடுத்து கார்வி நிறுவனம், பார்த்தசாரதியுடன் தொடர்புடைய சுமார் 700 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
முதலீட்டாளர்கள் பலரது முதலீடுகள் மூலம் திரட்டப்பட்ட ரூ. 2,874 கோடியை வேறு பணிகளுக்கு சட்ட விரோதமாகப் பயன்படுத்தினார் என்பது பார்த்தசாரதி மீதான குற்றச்சாட்டு. மேலும் தன் நிறுவனத்தின் பங்குகளை வங்கிகளில் அடகு வைத்து கடன் பெற்று அதன் மூலம் அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாகவும் மற்றொரு குற்றச்சாட்டை அவர் எதிர்கொண்டுள்ளார்.
இந்நிலையில், பார்த்தசாரதியையும் ஹரியையும் காவல்துறை பெங்களூரு மத்திய சிறையில் அடைத்துள்ளது. இருவரும் அமலாக்கத்துறையால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் போலிஸ் காவலில் வைத்து இருவரும் அமலாக்கத்துறை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே கார்வி நிறுவனத்துடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடவடிக்கை மேற்கொண்டபோது பல முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமானது. இதையடுத்து அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டன.
மிகவும் சிக்கலான முறையிலும் எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையிலும் சில அதிகாரிகள் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் முதலீட்டாளர்களின் பணத்தை இதற்குப் பயன்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இம்மோசடியில் கார்வி நிறுவனத் தலைமை நிர்வாக இயக்குநருக்கும் பங்குள்ளது அமலாக்கத்துறைக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
வங்கிகளில் பெற்ற கடனை அந்நியச் செலாவணி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியதும் இதற்காக 14 போலி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டதும் தெரியவந்துள்ளதை அடுத்து, வங்கிகள் அல்லாத பிற நிதி நிறுவனங்களிடமிருந்தும் ரூ. 400 கோடியை கார்வி குழுமம் கடனாகப் பெற்றுள்ளது என்பதையும் அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது.

