லக்னோ: தோல்வி பயம் காரணமாக பாஜக தலைமை சதிச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டி உள்ளார்.
தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக டெல்லியில் இருந்து உத்தரப் பிரதேசத்துக்கு ஹெலிகாப்டரில் தாம் பயணம் மேற்கொள்ள எந்தவித காரணமும் இன்றி அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் எதிர்வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளன.
இந்நிலையில் சமாஜ்வாடி கட்சியும், ராஷ்ட்ரீய லோக் தள் கட்சியும் தேர்தலுக்காக கூட்டணி அமைத்துள்ளன. இரு கட்சித் தலைவர்களும் இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களைச் சந்திப்பதாகவும் அதையடுத்து பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக நேற்று டெல்லியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் உத்தரப் பிரதேசம் செல்ல இருந்தார் அகிலேஷ் யாதவ். ஆனால் அவர் சென்ற ஹெலிகாப்டர் வழியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் டெல்லியிலேயே தரையிறங்க வேண்டிய கட்டாயத்திற்கு அவர் ஆளானார். இதனால் கோபமடைந்த அவர், தமது பயணம் பாதிக்கப்பட பாஜக சதி வேலைதான் காரணம் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தம்மால் குறித்த நேரத்தில் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்க மு டியவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், பாஜகவுக்கு தோல்விப் பயம் வந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
"எந்தவித காரணமும் இன்றி எனது ஹெலிகாப்டர் பயணம் நிறுத்தப்பட்டுள்ளது. எனக்கு அனுமதி அளிக்காத அதேநேரம் பாஜகவின் முக்கியத் தலைவர் ஒருவருக்கு டெல்லியில் இருந்து விமானத்தில் பறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
"என்னுடைய ஹெலிகாப்டர் பாதி வழியிலேயே தரையிறக்கப்பட்டதற்கு பின்னால் இருப்பது பாஜகதான் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். இது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தும் செயல்," என அகிலேஷ் யாதவ் சாடியுள்ளார்.
எனினும் அவரது இந்தக் குற்றச்சாட்டுகளை ஏற்க இயலாது என்றும் அகிலேஷ் ஆதாரமின்றி குற்றம்சாட்டுவதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

