புதுடெல்லி: டெல்லியில் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் அன்றாட எண்ணிக்கை ஐந்தாயிரத்துக்கும் கீழ் பதிவானது.
இந்நிலையில், அங்கு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, கேரளாவில் தொற்று எண்ணிக்கை குறைவதாகத் தெரியவில்லை. அம்மாநிலத்தில் நேற்று முன்தினம் புதிதாக மேலும் 54 ஆயிரம் பேருக்கு கிருமி தொற்றியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நேற்று முன்தினம் 235,000 பேருக்கு புதிதாக கிருமி தொற்றி உள்ளது. மேலும், 871 பேர் மாண்டுவிட்டனர்.
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் மும்பையில் உள்ள தாராவி பகுதியில் நேற்று முன்தினம் ஒருவருக்குக்கூட தொற்று ஏற்படவில்லை.
இதற்கிடையே, கர்நாடகாவில் கொரோனா நெருக்கடியால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

