சீனா ஆக்கிரமித்துள்ள நிலங்கள்: பிரதமருக்கு ராகுல் கேள்வி
புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் இருந்து மாயமான சிறுவனை சீனா ஒப்படைத்திருப்பது ஆறுதல் அளிப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். எனினும், சீனா ஆக்கிரமித்துள்ள நிலம் எப்போது திரும்பப் பெறப்படும் பிரதமரே? என்று டுவிட்டர் பதிவு ஒன்றில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 18ஆம் தேதி சீன ராணுவத்தால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறுவன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.
அதிக சொத்துகள் உள்ள கட்சி பாஜக; தமிழகத்தில் முதல் இடத்தில் அதிமுக
புதுடெல்லி: நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில் பாஜகவுக்குத்தான் அதிக சொத்துகள் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்த அமைப்பின் தேர்தல் கண்காணிப்புப் பிரிவு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. பாஜகவுக்கு ரூ.4,847.78 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன என்றும் அடுத்தபடியாக, பகுஜன் சமாஜ் கட்சிக்கு ரூ.698.33 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் சொத்து மதிப்பு ரூ.588.16 கோடி என்றும் தமிழகத்தில் ரூ.267.61 கோடி மதிப்பிலான சொத்துகளுடன் அதிமுக முதல் இடத்தில் உள்ளது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. திமுகவுக்கு ரூ.8.05 கோடி நிதிச்சுமை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு விரைவில் நீதி கிடைக்க 700 நீதிமன்றங்கள்
டேராடூன்: பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். உத்தராகண்டில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், பெண்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு நாடு முழுவதும் 700க்கும் அதிகமான விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
நாட்டின் மிக வயதான வேட்பாளர்
சண்டிகர்: பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் சிரோமணி அகாலி தளத்தின் மூத்த தலைவர் பிரகாஷ் சிங் பாதல் போட்டியிடுகிறார். அவருக்கு வயது 94. இதன் மூலம் தேர்தல் களத்தில் நிற்கும் நாட்டின் அதிக வயதான வேட்பாளர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அம்மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் 92ஆவது வயதில் போட்டியிட்டார்.

