அவமானப்படுத்தப்பட்ட விவசாயிக்கு மன்னிப்பும் காரும் கிடைத்தது

அவமானப்படுத்தப்பட்ட விவசாயிக்கு மன்னிப்பும் காரும் கிடைத்தது

2 mins read
11744b08-3583-4198-bf72-8bb7c2210d4f
புத்தம்புது மஹிந்திரா பொலிரோ காருடன் விவசாயி கெம்பேகவுடா. -

இந்தியாவின் கர்நாடக மாநிலம், துமகுருவில் உள்ள மஹிந்திரா கார் விற்பனை நிலையம் ஒன்றுக்கு கார் வாங்க வந்த விவசாயி ஒருவருக்கும் அந்த நிலையத்தின் விற்பனையாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை இந்த விவகாரத்தில் சமரசம் காணப்பட்டது.

நடந்த தவறுக்கு மன்னிப்புக் கோரிய மஹிந்திரா நிறுவனம், புதிய பொலிரோ கார் ஒன்றை கெம்பேகவுடா எனும் அந்த விவசாயியின் வீட்டிற்கு அனுப்பி வைத்தது.

"மஹிந்திரா நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகளும் இதர பணியாளர்களும் வெள்ளிக்கிழமை காலை எனது வீட்டிற்கு வந்தனர். நடந்த தவறுக்கு என்னிடம் மன்னிப்புக் கோரியதுடன், அவர்களது ஷோரூமுக்கு கார் வாங்க வருமாறு எனக்கு அழைப்பும் விடுத்தனர். அதே நாள் மாலை எனது வீட்டிற்கு கார் அனுப்பி வைக்கப்பட்டது," என்றார் கெம்பேகவுடா.

பின்னர் மஹிந்திரா நிறுவனம் வெளியிட்ட டுவிட்டர் பதிவு ஒன்றில், "ஜனவரி 21ஆம் தேதி எங்கள் ஷோரூமுக்கு வந்த திரு கெம்பேகவுடாவுக்கும் அவருடைய நண்பர்களுக்கும் ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். நாங்கள் தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இந்த விவகாரத்திற்கு இப்போது தீர்வு காணப்பட்டுள்ளது. எங்களிடம் கார் வாங்கிய திரு கெம்பேகவுடாவுக்கு நாங்கள் நன்றி கூற விரும்புகிறோம்," எனக் குறிப்பிட்டது.

சில தினங்களுக்கு முன்பு கார் வாங்க மஹிந்திரா ஷோரூமிற்கு கெம்பேகவுடா சென்றிருந்தார். அப்போது அங்குள்ள விற்பனையாளர் ஒருவர், "காரின் மதிப்பு 10 லட்சம் ரூபாய், உன் பாக்கெட்டில் 10 ரூபாய் கூட இருக்காது," எனக் கூறி, கெம்பேகவுடாவையும் அவருடைய நண்பர்களையும் அவமானப்படுத்தியதாக கூறப்பட்டது.