கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் ஆளுநர் ஜக்தீப் தங்கருக்கும் இடையில் நீண்ட நாட்களாக நீடித்து வரும் பனிப்போர் முற்றி வருகிறது.
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக இருவருக்கும் இடையே சர்ச்சை ஏற்பட்டது. தமது ஒப்புதலின்றி மாநில அரசு துணைவேந்தர்களை நியமிப்பதாக ஆளுநர் குற்றம் சாட்டி வருகிறார்.
இந்நிலையில், மகாத்மா காந்தியின் 74வது நினைவு தினத்தை முன்னிட்டு கோல்கத்தாவில் உள்ள அவரது நினைவிடத்தில் ஆளுநர் ஜக்தீப் தங்கர் நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தனிப்பட்ட நபரின் விருப்பத்தின்படி செயல்படாமல், சட்டத்தின்படி செயல்படும்போது மட்டுமே ஜனநாயகம் தழைத்தோங்கும். அவர் (மம்தா பானர்ஜி) இதனை உணருவார் என்று நம்புகிறேன். அரசியல் சாசனத்தில் தெரிவித்துள்ளபடி ஆளுநருடன் அமர்ந்து மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை.
அரசியல் சாசனத்தின்படி, ஆளுநருக்கு முதல்வர் தகவல்களை அளிக்க வேண்டும். ஆனால், நான் ஆளுநராகப் பொறுப்பேற்றதில் இருந்து அவர் இதுவரை அப்படி நடந்து கொள்ளவில்லை," என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார் ஜக்தீப் தங்கர்.
தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை 'பெகாசஸ் விவகாரம், கொரோனா பெருந்தொற்று, மேற்கு வங்காளத்தின் உலக தொழில் கூட்டமைப்பு மாநாடு, மேற்கு வங்காள ஏரோட்ரோபோலிஸ் திட்டம், கூர்காலாந்து நில நிர்வாகம், மாநில நிதி ஆணையம்' உள்ளிட்டவை குறித்த தகவல்களை முதல்வர் மம்தாவிடம் ஆளுநர் கேட்டிருந்தார். அதற்கு மம்தா பதில் அளிக்காத நிலையில் ஆளுநர் நேற்று கொதிப்புடன் பேசினார்.

