'ஊழலை ஒழிக்க வேண்டும்'
புதுடெல்லி: இந்தியாவில் ஊழல் விரைவில் ஒழிக்கப்பட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடி அறைகூவல் விடுத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடந்த 85வது 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசிய திரு மோடி, "ஊழலை ஒழிக்க ஒவ்வோர் இந்தியக் குடிமகனும் தோள் கொடுக்க வேண்டும். ஊழல் கரையான்போல் நாட்டை அழித்துவிடும். இந்தியாவில் ஊழல் நுழைய முடியாத சூழலை உருவாக்க வேண்டும்," என்று வலியறுத்தினார்.
ஏழுமலையானுக்கு ஒரே நாளில்
ரூ.2.30 கோடி வருமானம்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த சனிக்கிழமை அன்று 28,234 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 12,466 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். இந்த நிலையில் அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.2 கோடியே 30 லட்சம் கிடைத்தது (S$ 415,000) என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
பொதிகைக்கு புதுப் பொலிவு
சென்னை: 'பொதிகை' ஒளிவழி புதுப்பொலிவு பெறும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். ஞாயிறு அன்று பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியைக் காண்பதற்காக அவர், சென்னை பொதிகை தொலைக்காட்சி நிலையத்துக்கு வந்தார். அப்போது பேசிய அமைச்சர் எல். முருகன், புதிய நிகழ்ச்சிகளுடன் எச்டி வடிவில் பொதிகை தமிழ் ஒளிவழி மேம்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.
இறந்தவருக்குத் தடுப்பூசி
போட்டதாக குறுந்தகவல்
துமகூரு: கர்நாடக மாநிலத்தில் துமகூரு சிற்றூரைச் சேர்ந்த 80 வயது பசப்பா என்பவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த 2021ல் உயிரிழந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பசப்பா பயன்படுத்திய கைேபசி எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் உங்களுக்கு 2வது முறை கொரோனா தடுப்பூசி வெற்றிகரமாகப் போடப்பட்டுள்ளது. தொற்றுப் பாதிப்பில்இருந்து தப்பிக்க கவனமாக இருங்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனைப் பார்த்த பசப்பாவின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இறந்துவிட்ட பசப்பாவுக்கு எப்படி இரண்டு முறை தடுப்பூசி போட்டிருக்க முடியும் என்று அவரது குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பேருந்து மோதி ஐவர் பலி
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் வேகமாகச் சென்ற மின்சாரப் பேருந்து ஒன்று, சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீதும் சாலையோரம் நின்றுக்கொண்டிருந்தவர்கள் மீதும் மோதியது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

