வெளிநாடுகளுக்கு ரூ.429 கோடி அனுப்பி அந்நியச் செலாவணி மோசடி
புதுடெல்லி: அந்நியச் செலாவணி மோசடி செய்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள சீனாவைச் சேர்ந்த நிதி நிறுவனத்தின் 288 கோடி ரூபாயை மத்திய அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
'பி.சி. ஃபைனான்ஷியல் சர்விஸ்' என்ற பெயரில் இந்தியாவில் இயங்கி வரும் அந்த நிறுவனம் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் உள்ள சீன நிறுவனங்களுக்கு பலகோடி ரூபாய் அனுப்பியது தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு சீன நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.429 கோடியும் உள்நாட்டில் ரூ.941 கோடியும் செலவிட்டுள்ளதாகவும் 'பி.சி. ஃபைனான்ஷியல் சர்விஸ்' நிறுவனம் கணக்கு காட்டி உள்ளது.
இதில் வெளிநாட்டு சீன நிறுவனங்களுக்கு கணினி மென்பொருள்கள், அவை சார்ந்த சேவைகளுக்காக பணம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் வட்டார அலுவலகத் தலைவரின் உத்தரவை ஏற்று, நிறுவன இயக்குநர்கள் எந்தவித விளக்கமோ, விசாரணைகளோ இன்றி இவ்வளவு பெரிய தொகையை வெளிநாடுகளுக்கு அனுப்ப ஒப்புதல் வழங்கியது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அந்நியச் செலாவணி தொடர்பாக முறைகேடு நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதால், அந்நிறுவனத்தின் ரூ.288 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'பி.சி. ஃபைனான்ஷியல் சர்விஸ்' நிறுவனத்தின் இதர செயல்பாடுகள் குறித்தும் விசாரணை நடக்கிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு பல்வேறு நிறுவனங்கள் கைபேசி செயலி மூலம் கடன் வழங்கியதாகவும் வாங்கிய தொகையை திருப்பிச் செலுத்தவில்லை எனில் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் பரவலாகப் புகார்கள் எழுந்தன.
வங்கி சாரா நிதி நிறுவனமாக 'பி.சி. ஃபைனான்ஷியல் சர்விஸ்' பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நிறுவனமும் ஏராளமானோ ருக்கு கடன் வழங்கியதாகத் தெரிகிறது. கடன் பெற்றவர்கள் காலதாமதமாக தவணை தொகை செலுத்தினாலோ, கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்த தவறினாலோ, அவர்கள் மிரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
"மேலும், அவர்களின் தனிப்பட்ட தகவல்களை இந்நிறுவனம் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. குடும்பத்தாரும் மிரட்டலுக்கு ஆளானதை அடுத்து, இந்நிறுவனத்தில் கடன் வாங்கிய சிலர் உயிரை மாய்த்துக்கொள்வது, பல்வேறு தவறான முடிவுகளை எடுத்துள்ளதாகத் தெரிகிறது," என்று அமலாக்கத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏராளமானோர் இது தொடர்பாக புகார் அளிக்கத் தொடங்கியதை அடுத்து இந்த நிறுவனம் தொடர்பாக அமலாக்கத்துறை பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

