செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
cab51a2c-659d-4747-bcca-b1a56ef66835
-

342 வெளிநாட்டுச் செயற்கைக் கோள்களை செலுத்தியுள்ளது இஸ்ரோ

புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் எனப்படும் இஸ்ரோ இதுவரை இந்தியாவின் 129 செயற்கைக்கோள் களையும் 36 நாடுகளைச் சேர்ந்த 342 வெளிநாட்டு செயற்கைக் கோள்களையும் விண்ணில் செலுத்தி உள்ளதாக மத்திய அணு சக்தி அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். கடந்த 1975ஆம் ஆண்டு முதல் இஸ்‌ரோ செயற்கைக் கோள்களை ஏவி வருவதாக அவர் நாடாளுமன்றத்தில் பேசும்போது குறிப்பிட்டார். இதற்கிடையே, எதிர்வரும் 14ஆம் தேதி 'பிஎஸ்எல்வி 52' ராக்கெட்டை விண்ணில் செலுத்த உள்ளது இஸ்‌ரோ.

லக்கிம்பூர் வழக்கு: மத்திய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்‌ராவுக்குப் பிணை

லக்னோ: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய லக்கிம்பூர் வன்முறைச் சம்பவம் தொடர்பில் கைதான மத்திய அமைச்சர் அஜய் மிஸ்‌ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு லக்னோ நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டது. அந்த வன்முறைச் சம்பவத்தின்போது நான்கு விவசாயிகள், பாஜகவினர் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஆஷிஷ் மிஸ்ரா மீது வழக்குப் பதிவாகி, அவர் கைதானார். இந்த வழக்கில் உத்தரப் பிரதேச காவல்துறை சுமார் ஐந்தாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்நிலையில் நீதிமன்றத்தில் பிணை பெற்று வெளியே வந்துள்ளார் ஆஷிஷ் மிஸ்‌ரா.

16 ஆண்டுகளாக குழந்தை இல்லை: ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்

திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த பிரசன்னகுமாரி ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். இவருக்கும் சுரேஷ் என்பவருக்கும் கடந்த 2005ஆம் ஆண்டு திருமணமானது. எனினும் கடந்த 16 ஆண்டுகளாக இவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. இதற்காகப் பல்வேறு சிகிச்சைகளைப் பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் பிரசன்ன குமாரி கர்ப்பம் அடைந்தார். தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வந்த அவருக்கு இப்போது ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. அவரது பிரசவத்துக்கான செலவை முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும் தாயும் நான்கு குழந்தைகளும் நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

விவசாயி வங்கிக்கணக்கில் தவறாக செலுத்தப்பட்ட ரூ.15 லட்சம்

மும்பை: மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயி ஞனேஷ்வரின் வங்கிக் கணக்கில் திடீரென ரூ.15 லட்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இதையறிந்த அவர், பிரதமர் மோடி தமது தேர்தல் வாக்குறுதியின்படி, நாட்டு மக்கள் அனைவருக்கும் ரூ.15 லட்சம் கொடுப்பதாகக் கருதி, வங்கியில் இருந்து பணத்தை எடுத்து ஒன்பது லட்சம் ரூபாயில் வீடு கட்டினார். மேலும், பிரதமருக்கு நன்றி தெரிவித்து கடிதமும் எழுதியுள்ளார். இந்நிலையில், ஆறு மாதங்களுக்குப் பிறகு அவரது கணக்கில் தவறாகப் பணம் போடப்பட்டதாகவும் அதை உடனே திரும்ப ஒப்படைக்கும்படியும் ஒரு கடிதம் வர, அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் ஞனேஷ்வர். பிறகு கிராம மேம்பாட்டு திட்டங்களுக்காக மத்திய அரசு ஒதுக்கிய தொகை, இவரது வங்கிக்கணக்குக்கு தவறுதலாக மாறிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து, ஞனேஷ்வர் ஆறு லட்சம் ரூபாயை வங்கியிடம் ஒப்படைத்துவிட்டார் என்றாலும் மீதமுள்ள 9 லட்சத்தை எப்படி திருப்பிச் செலுத்துவது எனத் தெரியாமல் விழிக்கிறார்.