புதுடெல்லி: நாட்டில் உள்ள விவசாயிகளின் மனதில் தமக்குரிய இடத்தைப் பிடித்துவிட்டதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த அண்மைய பேட்டி ஒன்றில், விவசாயிகளின் வேதனையை தம்மால் உணர முடிகிறது என்றார்.
விவசாயிகளின் நலன் கருதியே மூன்று புதிய வேளாண் சட்டங்களும் கொண்டு வரப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், பின்னர் நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு அவை திரும்பப் பெறப்பட்டது என்றார்.
"மக்களுக்குச் சேவையாற்றுவதில் பாஜக எப்போதும் முனைப்பாக உள்ளது. 'அனைவரின் முயற்சி, அனைவருக்குமான வளர்ச்சி' என்ற தாரக மந்திரம் மூலம் செயல்பட்டு வருகிறோம்," என்று பிரதமர் மோடி பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி பிரதமர் மோடி மீது மாநிலங்களவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
மாநிலங்களவையில் பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தின் கதவுகளை மூடிவிட்டு, தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கியதாகக் குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து, அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உரிமை மீறல் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது டிஆர்எஸ் கட்சி.
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி, பிரதமர் மோடிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், அண்மையில் ராமாநுஜர் சிலை திறப்பு விழாவுக்காக ஹைதராபாத் வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்காமல் புறக்கணித்தார் அக்கட்சித் தலைவரும் தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ்.
இப்போது பிரதமர் மீது அக்கட்சி மாநிலங்களவையில் உரிமை மீறல் தீர்மானமும் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

