புதுடெல்லி: இந்தியாவில் கொவிட்-19 தொற்று மிகவும் வேகமாகக் குறைந்து வருகிறது.
இந்தச் சூழலில் முகக்கவசத்தை அணியவேண்டிய தேவை இனி இல்லை என்று அறிவிப்பது பற்றி மகாராஷ்டிரா மாநிலம் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் கூறின.
இதன் தொடர்பில் அந்த மாநிலம் மத்திய அரசிடம் இருந்தும் மாநில சிறப்புப் பணி வல்லுநர்களிடம் இருந்தும் யோசனைகளையும் கருத்துகளையும் நாடி இருக்கிறது.
அந்த மாநிலத்தின் சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோபி, கோல்காபுர் நகரில் இவ்வாறு கூறினார்.
இவ்வேளையில், கொரோனா தலைவிரித்தாடியபோது, 2020ஆம் ஆண்டு மார்ச்சில் முதன்முதலாக ஊரடங்கு நாடு முழுவதும் விதிக்கப்பட்டது.
ஊரடங்கு நடப்பில் இருந்த முதல் மூன்று மாதத்தில் 2.3 மில்லியன் மக்கள் வேலையிழந்துவிட்டதாக மத்திய அரசாங்கம் இப்போது அறிவித்து உள்ளது.
உற்பத்தி, கட்டுமானம், சுகாதாரம், கல்வி, வர்த்தகம், போக்குவரத்து உள்ளிட்ட முக்கியமான ஒன்பது துறைகளைச் சேர்ந்த புள்ளிவிவரங்கள் மூலம் இந்த நிலவரம் தெரியவருகிறது.
தொழிலாளர், வேலை வாய்ப்பு அமைச்சு இது பற்றி நாடாளுமன்றத்தில் விளக்கியது.
இதனிடையே, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கிருமி தொற்றியோரின் எண்ணிக்கை 58,077 ஆக இருந்ததாக தகவல்கள் தெரிவித்தன.
ஒரே நாளில் 1.5 லட்சம் பேர் குணமடைந்து இருக்கிறார்கள். அதேபோல, மரண எண்ணிக்கையும் 657 பேராகக் குறைந்துவிட்டது. இந்த எண்ணிக்கை முந்திய 24 மணி நேரத்தில் 1,241 ஆக இருந்தது.

