புதுடெல்லி: இந்திய தலைநகர் புதுடெல்லி அருகே ஹரியானா மாநில எல்லைப் பகுதிக்குள் கட்டப்பட்டு இருக்கும் 'சின்டெல்ஸ் பாரடிசோ' என்ற 18 மாடி புளோக்கின் உச்சிப் பகுதி நேற்று அதிகாலையில் திடீரென இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுவதாகவும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் ஊடகங்கள் மேலும் கூறின.
அந்தப் புளோக்கின் மேல் கூரை இடிந்து 18வது மாடியில் உள்ள வீடுகளுக்குள் திடீரென விழுந்விட்டது. அதில் பலரும் சிக்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விபத்து நிகழ்ந்ததும் கீழ்மாடி வீடுகளில் இருந்தவர்கள் பயந்து போய் வெளியேறிவிட்டனர்.
காயம் அடைந்த பலரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.
இவ்வேளையில், தரமான பொருள்களைக் கொண்டு அந்தக் கட்டடம் கட்டப்படவில்லை என்பதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு குடியிருப்பாளர்கள் நேற்று வீதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.