புதுடெல்லி: இந்திய மக்களைக் கலங்கடிக்கும் வகையில் நாள்தோறும் அதிகரித்து வந்த கொவிட்-19 பாதிப்பு, இப்போது தொடர்ந்து சரிந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் நாடெங்கும் 50,407 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாகவும் அன்றாட கிருமிப் பரவல் விகிதம் 3.48% என்றளவில் உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று முன்தினம் 58,077 பேர் தொற்றால் பாதிக்கப் பட்ட நிலையில், நேற்று 50,407 பேருக்கு இப்பாதிப்பு உறுதியானது. இது நேற்று முன்தின பாதிப்பை விடவும் 13% குறைவாகும்.
அதேபோல், தொற்றுப் பாதிப் பால் ஒரே நாளில் 804 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 507,981 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 136,962 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைவோர் விகிதம் 97.37% ஆக உள்ளது. இத்தொற்றுக்கு தற்போது 610,443 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிருமி பாதிப்பு குறைந்து வருவதால் முகக் கவசம் அணிவதில் இருந்து மக்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து பரி சீலித்து வருவதாக மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.
கொரோனா முடிவுக்கு வரவில்லை என எச்சரிக்கை
இதற்கிடையே, "கொரோனா பரவல் முடிவுக்கு வந்துவிட்டதாக நினைத்துவிடாதீர்கள். தற்போது பின்பற்றும் தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு நெறிமுறைகள் எதிர்காலத்திலும் தொடரவேண்டும். உருமாறிய தொற்று எந்த நேரத்திலும் எங்கு வேண்டுமானாலும் பரவலாம். எனவே, எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். இவ்வாண்டு இறுதியில் நிலைமை சற்று சீரடையலாம்,'' என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
கோடிக்கணக்கில் தடுப்பூசி போடாத முதியவா்கள்
மக்களவையில் மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சா் பாரதி பிரவீண் பவாா் கூறியபோது, இம்மாதம் 8ஆம் தேதி நிலவரப்படி, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 1,20,82,792 போ் முதல் தவணை தடுப்பூசியும் 1,68,03,864 போ் இரண்டாம் தவணை தடுப்பூசி யும் இதுவரை போட்டுக்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

