குறித்த நேரத்தில் விமானம் புறப்பட விமானச் சிப்பந்திகளுக்கு ஏர் இந்தியா நிறுவனம் புதிய ஆலோசனைக் குறிப்பு ஒன்றை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 13) வழங்கியுள்ளது.
குறைவாக நகை அணிவது, பணி தொடங்குவதற்குமுன் விமான நிலையங்களில் உள்ள 'டியூட்டி-ஃப்ரீ' கடைகளுக்குச் செல்வதைத் தவிர்ப்பது உள்ளிட்டவை அந்த ஆலோசனைக் குறிப்பில் அடங்கும்.
குறைவாக நகை அணிந்திருப்பதன்மூலம், சுங்கச் சோதனையில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என ஏர் இந்தியா கூறியது.
பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு முன்போ ஏறும்போதோ உணவு, பானங்களை அருந்த வேண்டாம் என விமானச் சிப்பந்திகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அதனுடன், பயணிகளை அவரவர் இருக்கைகளில் விரைவாக அமர்த்த விமானச் சிப்பந்திகள் உதவ வேண்டும்.
குடிநுழைவு, பாதுகாப்பு பரிசோதனைகளை நிறைவேற்றியபின் உடனடியாக 'போர்டிங் கேட்'டுக்கு விமானச் சிப்பந்திகள் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியதைத் தொடர்ந்து, மாற்றத்தைப் பயணிகள் உடனடியாக உணர டாட்டா குழுமம், இரு விஷயங்களைச் செயல்படுத்தத் தொடங்கிவிட்டது. ஒன்று, குறித்த நேரத்தில் விமானம் புறப்படுவதை உறுதிசெய்வது. மற்றொன்று, விமானப் பயணத்தின்போது உணவுச் சேவையை மேம்படுத்துவது.


