போர்பந்தர்: குஜராத் போர்பந்தர் அருகே வெளிநாட்டுக் கப்பலில் இருந்து ரூ.2,000 கோடி மதிப்புள்ள 760 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடற்படையினரும் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் நடுக்கடலில் அந்தக் கப்பலை சோதனை நடத்தியபோது அதிக அளவில் போதைப்பொருள் கப்பலில் இருந்தது தெரியவந்ததாக தகவல்கள் கூறின.
ஹெராயின், கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்ட அந்தப் போதைப்பொருள்கள் குஜராத் போர்ப்பந்தர் துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டன.
குஜராத் மாநிலத்தின் கடலோரப் பகுதியில் அரபிக் கடலில் கடத்தல் கப்பல் சிக்கியதாக போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினர் தெரிவித்தனர்.
ஆழ்கடல் பகுதியில் எடுக்கப்பட்டுள்ள இத்தகைய முதல் நடவடிக்கை இது என்று தெரிவ தாகவும் அதிகாரிகள் கூறினர்.
இதனிடையே, ஆந்திராவில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட 'பரிவர்த்தனா நடவடிக்கை' என்ற முயற்சியின் விளைவாக மாநிலம் முழுவதிலும் ரூ.850 கோடி மதிப்புள்ள 2 லட்சம் கிலோ கஞ்சா பிடிபட்டது.
அவை வனப் பகுதியில் மலை மலையாக 12 இடங்களில் குவிக்கப் பட்டு எரிக்கப்பட்டது.
ஆந்திரா-ஒடிசா மாநில எல்லையில் குக்கிராமங்களில் கஞ்சா பயிரிடப்பட்டு நாடு முழுவதும் பல்வேறு வழிகளில் கடத்தப்படுகிறது என்றும் கஞ்சா வளர்க்க கிராம மக்களுக்கு நக்சலைட்டுகள் உதவி செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
இவ்வேளையில், மும்பை விமான நிலையத்தில் ஜிம்பாப்வே பெண்ணிடம் இருந்து சுமார் ரூ.60 கோடி போதைப்பொருளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்தப் பெண்ணை கைது செய்தனர்.
ஆந்திராவில் அதிகாரிகள் கைப்பற்றிய ரூ.850 கோடி மதிப்புள்ள 2 லட்சம் கிலோ கஞ்சா மலைமலையாக குவிக்கப்பட்டு எரிக்கப்பட்டது. படம்: தமிழக ஊடகம்

