மகளின் 'வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்' தொடர்பில் தகராறு; மாது மரணம்

மகளின் 'வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்' தொடர்பில் தகராறு; மாது மரணம்

1 mins read
a80e5224-631c-47da-ad09-cd54cb8f7a0f
படம்: ஏஎஃப்பி -

இரு குடும்பங்களுக்கு இடையே தகராறு மூண்டதைத் தொடர்ந்து அதில் காயமுற்ற 48 வயது மாது ஒருவர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், பல்கார் மாவட்டத்தில் நிகழ்ந்தது.

இறந்தவரின் மகள் வைத்திருந்த 'வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்' தொடர்பில் பிப்ரவரி 10ஆம் தேதி தகராறு ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் உட்பட மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பிரித்தி பிரசாத் எனும் 20 வயது பெண் 'வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்' ஒன்றைப் பதிவேற்றம் செய்திருந்தார். அக்கம்பக்கத்தில் வசிக்கும் அவருடைய 17 வயது நண்பர் ஒருவருக்கு அந்த ஸ்டேட்டசை பிடிக்கவில்லை.

அதையடுத்து, அவரும் அவருடைய தாயார் மற்றும் சகோதரரும் பிரித்தியின் வீட்டிற்குச் சென்று அவரை எதிர்த்தனர். வாக்குவாதம் தகராறாக மாறியதைத் தொடர்ந்து, பிரித்தியின் தாயார் தாக்கப்பட்டதில் அவர் காயமுற்றார். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) உயிரிழந்தார்.

அந்த மாதுக்கு சுகாதாரப் பிரச்சினைகள் இருந்தாலும், தகராறில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் உயிரிழந்ததாக காவல்துறை கூறியது.

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ் கடாம் கூறுகையில், "சம்பந்தப்பட்ட வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பற்றிய விவரங்களை என்னால் வெளியிட இயலாது. என்றாலும், அந்தப் பதின்ம வயது சிறுமி தனிப்பட்ட முறையில் அதை மனதில் எடுத்துக்கொள்வதற்கான அவசியம் இல்லை," என்று விவரித்தார்.

அச்சிறுமி சீர்திருத்த இல்லத்துக்கு அனுப்பப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தளம் கூறியது.

குறிப்புச் சொற்கள்