புதுடெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,113 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று கணிசமாகக் குறைந்து வருவதையடுத்து இந்திய அரசு சில கட்டுப்பாட்டுத் தளர்வுகளை அறிவித்துள்ளது. அவற்றில் முக்கியமாக வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு ஏழு நாள்கள் தனிமைப்படுத்தல் தேவையில்லை என்பதும் ஒன்று. மாறாக, வருகை தந்த நாளில் இருந்து 14 நாட்களுக்கு தங்கள் உடல் நிலையைக் கண்காணித்துக் கொள்ள வேண்டும். இந்த வழிகாட்டுதல் நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து திருத்தப்பட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்டது.
அன்றாட பரவல் (பாசிடிவிட்டி) விகிதம் 3.19% என்றளவில் உள்ளது. வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 3.99%. நோயில் இருந்து குணமடைவோர் விகிதம் 97.37% ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 346 தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதுவரை நாடு முழுவதும் 173 கோடிப் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

