பிஎஸ்எல்வி சி-52 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்
புதுடெல்லி: 2022ஆம் ஆண்டில் இஸ்ரோவின் முதல் செயற்கைக்கோளான 'பிஎஸ்எல்வி சி-52' வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மூன்று செயற்கைக்கோள்களை ஏற்றிக்கொண்டு பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் நேற்றுக் காலை விண்ணில் செலுத்தப்பட்டது.
மொத்தம் 1,710 கிலோ எடை கொண்ட ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளான இஓஎஸ்-04, வேளாண்மை, மண்ணின் ஈரப்பதம், நீர்வளம் போன்றவற்றுக்குத் தேவையான உயர்தர வரைபடங்களை அனைத்துக் காலநிலைகளிலும் எடுத்து அனுப்பக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. இது பூமியில் இருந்து 529 கி.மீ. தொலைவில் துருவச் சுற்றுப்பாதையில் சுற்றும் வகையில் நிறுவப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து
இந்தியா - இலங்கை பேச்சுவார்த்தை
புனே: இந்தியா, இலங்கை இடையிலான ஒன்பதாவது வருடாந்திர இராணுவப் பணியாளர்களுக்கான பேச்சு வார்த்தை புனேவில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க இலங்கை ராணுவ அதிகாரிகள்
குழு கடந்த 10ஆம் தேதி இந்தியா வந்ததாக பாதுகாப்பு அமைச்சகத்தின் புனே மக்கள் தொடர்பு பிரிவு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் பலதரப்புப் பயிற்சிகள், கலை, விளையாட்டு மற்றும் கலாசாரப் பரிமாற்றங்கள் ஆகிய துறைகளில் உறவுகளை மேம்படுத்துதல் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
அதிக 'மேக்கப்' வேண்டாம் என
விமானப் பணிப்பெண்களுக்கு அறிவுரை
மும்பை: விமானங்களை தாமதம் இன்றி இயக்குவதற்காக பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை டாடா நிறுவனத்தின் ஏர்இந்தியா விதித்துள்ளது. அதன்படி பயணிகள் விமானங்களில் ஏறும்போது பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்கள் உணவு மற்றும் பானங்கள் அருந்திக்கொண்டிருக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுங்கம் மற்றும் பாதுகாப்பு ஆகிய சோதனைகளில் தாமதம் ஏற்படுவதைத் தடுக்க நிறைய மேக்கப் போடக்கூடாது என்றும் அதிக நகைகள் அணிய வேண்டாம் என்றும் குறைந்தபட்ச நகைகளை அணியவேண்டும் என்றும் பணிப்பெண்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பயணிகள் விமானங்களில் தாமதமின்றி ஏறுவதற்கும், இருக்கையில் அமருவதற்கும் பணிப்பெண்கள் உதவுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கட்டுப்பாட்டு அறை பரிசோதனை முகப்புகளில் பயணிகளை நீண்ட நேரம் காத்திருக்க வைக்கக்கூடாது. சோதனைகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் அந்த நிறுவனம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

