புதுடெல்லி: இந்திய அரசாங்கத்தின் காப்புறுதி நிறுவனமான எல்ஐசி பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ) செய்ய உள்ளது. அதற்கான ஆயத்தப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்று பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியிடம் பங்குகள் விற்பனை தொடர்பான வரைவு அறிக்கையை (டிஆர்ஹெச்பி) எல்ஐசி தாக்கல் செய்துள்ளது. பொதுப் பங்கு வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
எனினும் மார்ச் 31ஆம் தேதிக்குள் பொதுப்பங்கு வெளியீட்டு முறை செயல்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
எல்ஐசியில் ஐந்து விழுக்காட்டுப் பங்குகளை விற்று ரூ.78,000 கோடி நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மொத்தம் 31.6 கோடி பங்குகள் விற்கப்படும் எனத் தெரிகிறது.
இதில் ஐம்பது விழுக்காடு நிறுவன முதலீட்டாளர்களுக்கும், 35% சில்லறை முதலீட்டாளர்களுக்கும் 10% எல்ஐசி ஈட்டுறுதியாளர்களுக்கும் (பாலிசிதாரர்கள்) ஒதுக்கப்பட இருப்பதாகவும், ஐந்து விழுக்காடு பங்கு விலக்கு அளிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் ரூ.1.75 லட்சம் கோடியைத் திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது தனியார் காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு 74 விழுக்காடு வரை உள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் 20% வரை அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், எல்.ஐ.சி. காப்புறுதி நிறுவனத்தில் இதுவரை அந்நிய முதலீட்டுக்கு அனுமதியில்லை. தற்போது பொதுப்பங்கு வெளியீட்டு முறை செயல்படுத்தப்படவிருப்பதால் எல்.ஐ.சி.-யில் அந்நிய முதலீடுகள் குறித்து பரிசீலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் மொத்த காப்பீட்டுச் சந்தையில் 70 விழுக்காடு வரை எல்.ஐ.சி. காப்புறுதி நிறுவனத்திடம் உள்ளது.
இந்நிறுவனத்தில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட காப்புறுதி முகவர்கள் உள்ளனர். இந்நிறுவனத்தின் அலுவலகத்தில் மட்டும் 114,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.

