காந்திநகர்: நீரவ் மோடி, விஜய் மல்லையா ஆகியோரை மிஞ்சும் வகையில் குஜராத்தைச் சேர்ந்த கப்பல் கட்டும் நிறுவனம் ஒன்று ஏறக்குறைய 23,000 கோடி ரூபாய் வங்கிகளிடம் இருந்து கடன்பெற்று மோசடி செய்துள்ளதை சிபிஐ அம்பலமாக்கியுள்ளது.
ஐசிஐசிஐ, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐடிபிஐ வங்கி, பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட 28 வங்கிகளில் 22,842 கோடி ரூபாய் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும், சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் ரிஷி அகர்வால், சந்தானம் முத்துசாமி, அஷ்வினி குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 'ஏபிஜி ஷிப்யார்டு' என்னும் கப்பல் கட்டுமான நிறுவனம் குஜராத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. தஜெஹ் மற்றும், சூரத்தில் கட்டுமானத் தளங்களைக் கொண்டுள்ள இந்த நிறுவனம் கடந்த 16 ஆண்டுகளில் 165 கப்பல்களைக் கட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் மீது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 2019ஆம் ஆண்டு வங்கிக் கடன் தொடர்பாக புகார் ஒன்றை அளித்தது.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் வங்கிகளில் இருந்து பெறப்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் கடன்களை வெளிநாடுகளில் உள்ள இதன் துணை நிறுவனங்களுக்கு முறைகேடாக மாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

